உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருவதால், இருநாட்டு ராணுவத்திலும் உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம், ஐ.நா.,வுக்கான உக்ரைன் துாதர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா அறிவுறுத்தி உள்ளார். 4,300க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக, உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு விமானம் தகர்ப்புஉலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான, ‘ஆன்டோனோவ் ஏ.என்., 225’ விமானம், உக்ரைன் நாட்டை சேர்ந்தது. இந்நிலையில் தலைநகர் கீவில் உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த விமானம், நேற்று ரஷ்ய படையின் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.எலான் மஸ்க் உதவிபோர் நடக்கும் உக்ரைனில், இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அமைச்சர் மிகைலோ பெடோரோவின் வேண்டுகோளை ஏற்று, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், தன், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவன செயற்கைக்கோளான, ‘ஸ்டார்லின்க்’ வாயிலாக, உக்ரைனுக்கு இணைய சேவைகளை நேற்று வழங்கினார்.
ராணுவத்துக்கு புடின் நன்றிஉக்ரைனில் நுழைந்து போர் புரிந்து வரும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் நேற்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கிழக்கு உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவும் நோக்கத்தில், ராணுவ நடவடிக்கைகளில் வீரத்துடன் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு என் நன்றி,” என்றார்.உக்ரைன் அதிபர் வரவேற்புரஷ்யாவுடன் பேச்சு வாயிலாக தீர்வு காண, உக்ரைனுக்கு பல நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த பேச்சுக்கான ஏற்பாடுகளை செய்ய, துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் மற்றும் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் எடுத்த முயற்சிகளை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.இந்திய துாதரகம் கண்காணிப்புரஷ்ய படைகள் ஆதிக்கம் செலுத்தும் கிழக்கு உக்ரைனில், ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் நிலவும் சூழலை கூர்ந்து கண்காணித்து வருவதாக, தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
அங்குள்ள இந்தியர்களை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.ஆயுதங்கள் அனுப்பும் ஜெர்மனிஉக்ரைன் நாட்டிற்கு, பல உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வினியோகிக்க, ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 1,000 பீரங்கி தகர்ப்பு ஆயுதங்களும், 500 ஏவுகணைகளும், உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார்.
நாய்க்காக தவிக்கும் மாணவர்உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலையில் பொறியியல் மூன்றாமாண்டு படிக்கும் இந்திய மாணவர் ரிஷப் கவுசிக், தன் வளர்ப்பு நாயையும் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், அங்கு ஒரு சுரங்கத்துக்குள் தன் வளர்ப்பு நாயுடன் பதுங்கியுள்ளார்.
இதுகுறித்து, ரிஷப் கவுசிக் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள, ‘வீடியோ’வில் கூறியிருப்பதாவது:வெடிகுண்டு சத்தத்தால், என் வளர்ப்பு நாய்க்குட்டி ‘மாலிப்’ மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அதை நான் இந்தியா அழைத்துச் செல்ல, இந்திய துாதரக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். மறுத்து விட்டனர்.இந்த நாய்க்குட்டியை காப்பாற்ற, இந்திய அதிகாரிகள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பயணத்திட்டப்படி ரிஷப் கவுசிக் நேற்று காலை புறப்பட்ட விமானத்தில் ஏறியிருக்க வேண்டும். ஆனால், தன் வளர்ப்பு நாய்க்குட்டியை அழைத்துச் செல்ல, இந்திய அரசின் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கேயே தங்கியுள்ளார்.