வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட பாலாத்துவண்ணான் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா இன்று நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும். ஒவ்வொரு காளையும் கண்டிப்பாக இரண்டு சுற்றுகள் விடப்படுகின்றன. இந்தப் போட்டியை நடத்துகின்ற விழாக்குழுவினரின் தீர்ப்பே இறுதியானதாகும்.
இந்த போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ஒரு காளைக்கு ரூ.2000 வசூலிக்கப்பட்டு, அதற்கான அட்டை வழங்கப்படும். ஒரு காளைக்கு ஒரு அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. இரண்டு அட்டைகளை வாங்கி வெற்றி பெறும் காளைக்கு பரிசுகள் வழங்கப்படாது. இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.60,000, இரண்டாம் இடம்பிடிக்கும் காளைக்கு ரூ.50,000, மூன்றாமிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.40,000 வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து 4-வது பரிசாக ரூ.30,000 என தொடங்கி, 62-வது பரிசாக ரூ 3,000 ரொக்கமாக வழங்கப்படுகிறது. 63-வது பரிசாக 5 கிலோ ஸ்வீட்டும், 6 லிட்டர் குளிர்பானமும் வழங்கப்படுகிறது.
பத்துக்கும் மேற்பட்ட காயம்: காளைவிடும் திருவிழாவை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர். போட்டியில் கலந்துகொண்ட மாடுகள் முட்டியதில், விழாவைக் காண வந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.