கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக அரசையும், வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தையும் விமர்சித்தார்.
இதனால் பெங்களூரு சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது வழக்குப் பதிவு செய்து 23-ம் தேதி கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர். இதையடுத்து சேத்தன் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சேத்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலன், “போலீஸார் முறையான முன்னறி விப்பு அளிக்காமல், அவரது மனைவி மேகாவிடம் கையெழுத்து வாங்காமல் கைது செய்து 6 மணி நேரம் ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்தனர். இவ்வழக்கில் போலீஸார் எல்லா வகையிலும் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர்” என வாதிட்டார். இதையடுத்து நீதிமன்றம் சேத்தனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியது.