கீவ்:
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்த வேண்டும். அங்குள்ள இந்திய அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு செல்லக் கூடாது.
பல்வேறு எல்லைச் சோதனைச் சாவடிகளில் நமது மக்களை ஒருங்கிணைத்து வெளியேற்றுவதற்காக நமது அண்டை நாடுகளில் உள்ள நமது தூதரகங்களுடன் உக்ரைன் இந்திய தூதரகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. முன்னறிவிப்பின்றி எல்லைச் சோதனைச் சாவடிகளை அடையும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவது கடினமாக உள்ளது.
உக்ரைனின் மேற்கு நகரங்களில் தண்ணீர், உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் தங்குவது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது. நிலைமையை முழுமையாக அறிந்து கொள்ளாமல் எல்லை சோதனைச் சாவடிகளை அடைவதை கைவிட அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது கிழக்கு பகுதியில் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் (இந்தியர்கள்) தங்களுடைய தற்போதைய வசிப்பிடத்திலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
முடிந்தவரை வீட்டுக்குள்ளேயோ அல்லது தங்குமிடங்களிலோ இருக்குமாறும், உணவு, தண்ணீர் மற்றும் வசதிகள் எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.