புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த கிலி, நீமா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்திய இசை, பாடல்களுக்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைந்த அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது:
இம்மாத தொடக்கத்தில் இத்தாலியில் இருந்து விலைமதிப்பற்ற சிலைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அதில், ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய மிக்க சிலையும் ஒன்று. இந்த சிலை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள குண்டல்பூர் கோயிலில் திருடப்பட்டது. அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் ஆஞ்சநேயர் சிலைகள் திருடப்பட்டன. இந்த சிலை 600 முதல் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து நமது தூதரகம் இந்த சிலையை மீட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு வரை 13 சிலைகள் மட்டுமே இந்தியா கொண்டு வரப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு சிலைகளை மீட்க உதவி செய்கின்றன.
பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. கல்வி மற்றும் தொழில் துறைகளில் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.