ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடின்
உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.
ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய ராணுவத்திற்கு முடிந்தவரை எதிர் தாக்குதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள படையெடுப்பு, சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று, பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் பேச்சுவார்த்தைக்கு வரும்படி, உக்ரைன் நாட்டு அரசுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த அழைப்பை ஏற்க மறுத்த உக்ரைன், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின்தளமான செயல்படும் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், வேறொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறியது.
அடங்க மறுக்கும் ரஷ்யா – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்!
ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்ததால் கடும் கோபம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டிற்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த, அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதனால் போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களிலேயே, பெலாரஸ் நாட்டின் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் என, உக்ரைன் அரசு தெரிவித்தது.
இரு நாடுகளின் உயர் அதிகாரிகள், பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமேயானால், போர் பதற்றம் தணியும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்த, உடனடியாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கூறி, உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது, வரும் வாரம் விசாரணை நடைபெறும் தகவல் வெளியாகி உள்ளது.