Veto அதிகாரத்தால் வீழ்த்திய ரஷ்யா: Veto என்றால் என்ன? ரஷ்யாவின் Vetoவால் இந்தியா பயன்பட்டது எப்படி?

‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ரஷ்யா தன் ஒற்றை அதிகார வாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரம் என்ன? அதில் யார் யார் உறுப்பினர்கள்? வீட்டோ என்றால் என்ன? இந்தியா நடுநிலை வகித்தது சரியா? இனி ஐ.நா என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடலாம்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் வீட்டோ அதிகாரமும்

உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா சபையில் ஆறு துணை அமைப்புகள் உள்ளன. அவற்றில் அதிகாரம் பொருந்தியது, பாதுகாப்பு கவுன்சில். சர்வதேச நாடுகளின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதி செய்வது பாதுகாப்பு கவுன்சில்தான். ஐ.நா சபையில் புது உறுப்பினர்களைச் சேர்ப்பது, வாலாட்டும் நாடுகள்மீது பொருளாதாரத் தடை விதிப்பது, பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புவது, அவற்றுக்கான செலவுகளை கவனிப்பது, ஐ.நா பொதுச் செயலாளரை நியமிப்பது என்று சர்வ அதிகாரம் கொண்ட கவுன்சில் இது. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் எந்த முடிவையும் உலக நாடுகள் அனைத்தும் கட்டாயம் மதிக்க வேண்டும்.

ஐ.நா சபை

ஐ.நா சபை உருவான அதே 1946-ம் ஆண்டிலேயே இதுவும் உருவானது. அந்த நேரத்தில் உலகின் வல்லமை பொருந்திய தேசங்களாக இருந்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகியவையே ஐ.நா சபையின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. எனவே அவை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட்டன. இதுதவிர 10 தற்காலிக உறுப்பினர்களும் உண்டு.

பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெறுவதற்கு இரண்டு கட்டங்களைத் தாண்ட வேண்டும். அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக குறைந்தபட்சம் 9 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். அதேசமயத்தில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இந்த ஐந்து நாடுகளுக்கும் வாக்குரிமையுடன் சேர்த்து, வீட்டோ எனப்படும் எதிர்வாக்கு அதிகாரமும் உண்டு. ஐந்து பேரில் யார் ஒருவர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலும், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்துவிடும். மற்றவர்கள் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், தனக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி அதைத் தடை செய்வதே இந்த வீட்டோ அதிகாரம்.

ஒருவேளை ஒரு தீர்மானத்தில் நிரந்தர நாடு ஒன்றுக்கு முழுமையாக உடன்பாடு இல்லாமல் போகலாம். அப்போது ஆதரித்து வாக்களிக்காமல், வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகிக்கலாம். இதன்மூலம் அந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு வழிசெய்யலாம். ரஷ்யா தீர்மானத்தில் சீனா இப்படி வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது. ஆனால், ரஷ்யா எதிர்த்ததால் தீர்மானம் நிறைவேறவில்லை.

தற்காலிக உறுப்பினர்களுக்கு வாக்கு அதிகாரம் மட்டுமே உண்டு, வீட்டோ அதிகாரம் கிடையாது. இந்தத் தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். ஆண்டுக்கு ஐந்து பேர் புதிதாக வருவார்கள். ஐ.நா பொதுச்சபையில் இதற்கான தேர்தல் நடைபெறும். இதில் மொத்தமுள்ள நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவைப் பெறுவோரே பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் ஆக முடியும். ஜனவரி முதல் தேதியிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம்.

ஐ.நா சபை

தற்போது இந்தியா, அயர்லாந்து, நார்வே, மெக்சிகோ, கென்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அல்பேனியா, பிரேசில், கானா, கப்பான் ஆகியவை தற்காலிக உறுப்பு நாடுகள். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாடு தலைமை வகிக்கும். ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் வந்த பிப்ரவரியில், ரஷ்யாவே கவுன்சிலின் தலைவராக இருந்ததுதான் வரலாற்று விநோதம்.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்ததால், அடுத்த கட்டமாக ஐ.நா பொதுச்சபையைக் கூட்டி அங்கு வாக்கெடுப்பு நடத்த முடியும். 193 நாடுகள் கொண்ட பொதுச்சபையில் யாருக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது. ஆனால், உடனடியாக பொதுச்சபையைக் கூட்டுவதற்கு எந்த ஏற்பாடும் இப்போது இல்லை. அப்படிக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு ரஷ்யா கட்டுப்படுமா என்பதும் நிச்சயமில்லை.

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வீட்டோ அதிகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றும் ஒரு திசையிலும், ரஷ்யாவும் சீனாவும் இன்னொரு திசையிலும் எப்போதும் இருக்கின்றன. இதனால் பல முக்கிய விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படுவதே கிடையாது. இது ஐ.நா சபையை விஷப்பல் இல்லாத பாம்பாக மாற்றிவிட்டது.

ரஷ்யா இப்போது போட்டிருக்கும் வீட்டோ வாக்குடன் சேர்த்து, இதுவரை 294 முறை இந்த வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவே அதிக முறை இதைப் பயன்படுத்தியது. மொத்தம் 146 முறை. இதனாலேயே ஐ.நா-வுக்கான ரஷ்யத் தூதருக்கு என்ன பெயர் இருந்தாலும், அவரை ‘மிஸ்டர் வீட்டோ’ என்று கிண்டலாகக் குறிப்பிடுவார்கள்.

ரஷ்யாவுக்கு அடுத்து வீட்டோவை அதிகம் பயன்படுத்தியது அமெரிக்கா. 82 முறை பயன்படுத்தியுள்ளது. பிரிட்டன் 31 முறையும், சீனா 18 முறையும், பிரான்ஸ் 17 முறையும் வீட்டோவைப் பயன்படுத்தியுள்ளன.

தங்கள் நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த நாடுகள் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யா, இப்படி நான்கு முறை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு உதவி செய்துள்ளது.

சோவியத் யூனியன் அதிபராக இருந்த நிகிதா குருஷேவ், 1955-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியா வந்தார். ‘‘நாங்கள் எங்கோ தொலைதூரத்தில் இல்லை. உங்கள் எல்லைக்கு அருகில்தான் மாஸ்கோ இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்தப் பிரச்னை என்றாலும் ஒரு குரல் கொடுத்தால் போதும், ரஷ்யா உதவிக்கு வந்து நிற்கும்’’ என்று உறுதிமொழி கொடுத்துவிட்டுப் போனார். அதை நிஜமாகவே செய்தார் அவர்.

1957-ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையை ஐ.நா-வில் கிளப்பியது பாகிஸ்தான். ‘காஷ்மீருக்கு ஐ.நா படைகளை அனுப்ப வேண்டும்’ என்று பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டுவந்தபோது, தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை முறியடித்தது ரஷ்யா.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும் கோவா மட்டும் போர்ச்சுகல் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரிட்டனும் பிரான்ஸும் தங்கள் காலனியாதிக்கத்தை முடித்துக்கொண்டது போல போர்ச்சுகல் விலகத் தயாராக இல்லை. 1961-ம் ஆண்டு கோவா விடுதலைப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. கோவா மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அங்கிருந்த அரசு. இந்தியா உடனே தன் படைகளை கோவா அனுப்பியது. ‘இந்தியா தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டுவந்தது போர்ச்சுகல். அதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் ஆதரித்தன. ஆனால், ‘காலனி ஆட்சியாளர்களைத் துரத்தும் இந்தியாவின் முடிவு சட்டப்படியும் நீதிப்படியும் நியாயமானது’ என்று ரஷ்யா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் பக்கம் நின்றது. அந்த ஆண்டு இறுதியில் கோவா விடுதலை பெற்றது.

1962-ம் ஆண்டு அயர்லாந்திலிருந்து ஒரு தலைவலி வந்தது. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்க்க வேண்டும் என்று அயர்லாந்து ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான மற்ற நான்கு நாடுகளும் அதை ஆதரிக்க, ‘இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்று சொல்லி வீட்டோ மூலம் முறியடித்தது ரஷ்யா.

வங்க தேசத்தை விடுவிப்பதற்காக 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் செய்தது இந்தியா. பாகிஸ்தான் அந்த நேரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக மூன்றுமுறை பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் வந்தன. ‘இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான விவகாரம். இதில் மூன்றாம்நாட்டின் தலையீடு தேவையில்லை’ என்று சொல்லி மூன்று முறையும் தன் வீட்டோ அதிகாரத்தை இந்தியாவுக்கு ஆதரவாகப் பயன்படுத்தியது ரஷ்யா.

இந்தப் பழைய வரலாறுகள் காரணமாகவே, ‘இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’ என்று ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால், சோவியத் யூனியன் காலத்தில் இருந்தது போல இப்போது இருக்க முடியாது என்பதால், இந்தியா நடுநிலை வகித்திருக்கிறது. நம்மை விடவும் ரஷ்யாவுக்கு நெருக்கமாக இருக்கும் சீனாவே நடுநிலை வகித்தபோது, நாம் நடுநிலை வகித்ததில் தவறு கிடையாது. ஆனால், ‘இந்த நேரத்தில் நாம் தனிமைப்பட்டுவிட்டோம்’ என்ற ஆதங்கம் ரஷ்யாவுக்கு இருக்கக்கூடும்.

மோடி அரசை விமர்சனம் செய்யும் சிலர், ‘இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகித்தது கோழைத்தனம். இந்த நேரத்தில் உக்ரைனுக்கு ஆதரவான நிலை எடுத்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கு நெருக்கமாக மாறுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம்’ என்று ராஜதந்திரம் பேசுகிறார்கள்.

நாம் ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கு ரஷ்யாவின் கையில் இருக்கும் ஒற்றை வீட்டோ போதுமானது. தீர்மானத்தை ஆதரித்து இருந்தால் ரஷ்யாவின் பகைமையை சம்பாதித்து இருப்போம். எதிர்த்து இருந்தால் அமெரிக்காவின் பகைமையை சம்பாதித்து இருப்போம். இரண்டுமே நமக்குத் தேவையில்லை.

நாளைக்கு நமக்கு ஏதோ ஒரு நெருக்கடி என்றால், பாதுகாப்பு கவுன்சிலில் நம் பக்கம் நிற்கப் போகிற முதல் நாடாக ரஷ்யாவே இருக்கும். அந்த ரஷ்யாவை, இப்போது சர்வதேச அரங்கில் இந்தியா விட்டுக்கொடுக்க முடியாது. எல்லா நாடுகளும் தங்களின் நலனுக்கு ஏற்றபடிதான் மற்ற நாடுகளின் பிரச்னைகளைப் பார்க்கும். இது தப்பே இல்லை.

சரி, இந்தியாவுக்கு எப்போது இந்த வீட்டோ அதிகாரம் கிடைக்கும்?

‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த நாடுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’ என்று பல ஆண்டுகளாக இந்தியா கேட்கிறது. ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள் அதில் கிடையாது. இப்போது பொருளாதார வல்லமை பெற்ற நாடுகளான ஜெர்மனியோ, ஆஸ்திரேலியாவோ கிடையாது. வர்த்தக வல்லமை மிக்க இந்தியாவோ, பிரேசிலோ கிடையாது. இவர்கள் எல்லோருமே இடம் கேட்கிறார்கள்.

இவர்களைச் சேர்க்கலாமா என்பதையும் அந்த ஐந்து நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும். பஸ்ஸில் சொகுசாகப் படுத்து தூங்கியபடி வரும் ஒருவர், அடுத்த ஸ்டாப்பிங்கில் ஏறும் பயணிக்காக எழுந்து உட்காரச் சொன்னாலே கடுப்பாவார். தங்கள் அதிகாரங்களை இன்னும் சிலருடன் பகிர்ந்துகொள்வதற்கு வல்லரசுகளுக்கு மட்டும் எப்படி மனம் வரும்? அதனால் இந்த வீட்டோ வேறு யாருக்கும் கிடைக்காமல் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.