திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், “சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர். இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கியவர்கள்” என ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய வாசகம் இடம் பெற்றுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவானது சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தலைமையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, டி.ஆர். பாலு மற்றும் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க அமைச்சர்கள், கழக தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புத்தகம் வெளியிட்ட பின்பு வாழ்த்துரை வழங்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “உங்களில் ஒருவன் நூல் ஸ்டாலினின் 23 வயது வரையிலான வாழக்கையைக் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் வரலாற்றையும் ‘உங்களில் ஒருவன்’ நூல் பிரதிபலிக்கிறது. மிசா கால சமயங்களில் நானும், ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். முதல்வர் ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. கூட்டாட்சி மற்றும் அரசியலமைப்புக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதைக் காக்க முதல் ஆளாக முதல்வர் ஸ்டாலின் குரல் எழுப்பி வருகிறார். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார். கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார்” என்றார்.