சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
சென்னை மட்டுமல்ல சேலம் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி என அனைத்து மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க.வுக்கு தோல்விதான் ஏற்பட்டுள்ளது.
கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்டிருந்த நிலையில் அங்கேயும் அ.தி.மு.க.வுக்கு சருக்கல்தான் ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கிய 8 மாதத்தில் உள்ளாட்சியில் இவ்வளவு பெரிய தோல்விவியை சந்திக்கும் என்று அக்கட்சியை சார்ந்தவர்கள் கூட நினைக்கவில்லை.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்திருந்தும் போதிய வெற்றி கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தோல்வி அடைந்தவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை கட்சி மேலிடத்தில் தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக நிர்வாகிகள் கூறினாலும் அதையும் தாண்டி பல வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் மீதும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அவரவர் வார்டுகளில் போட்டியிட சில மாவட்டச்செயலாளர்கள், வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தலைமைக்கு புகாராக சென்றுள்ளது.
அதையும் மிறி சீட் வாங்கி நின்றால் அந்த வேட்பாளருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா காலத்தில் தலைமைக்கு பயந்து எல்லோரும் பணியாற்றினார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி விட்டது. யாருக்கும் பயம் கிடையாது. என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் குறைபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அடுக்கடுக்கான புகார்கள் தலைமைக்கும் சென்ற வண்ணம் உள்ளது.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி தோல்விக்கு என்னன்ன காரணங்கள் என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் ஓட்டுப்போட வராததே அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று சிலர் கூறினாலும் அது மட்டும் காரணம் அல்ல. என்று மாவட்டச்செயலாளர்கள் கூறி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது 2011 முதல் 2016 வரை கவுன்சிலராக இருந்தவர்களே அடுத்த 5 ஆண்டுக்கும் நிழல் கவுன்சிலர்களாக அதிகாரத்தில் இருந்தனர். அவர்களில் பலர் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும் தோல்விக்கு ஒரு காரணம் என்று நிர்வாகிகள் குறை கூறுகின்றனர்.
கட்சித்தலைமை மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்கள் சொல்வதைதான் முழுமையாக கேட்கிறார் களேதவிர கட்சி நிர்வாகிகள் கீழ்மட்ட அளவில் எந்த அளவுக்கு ஒரவஞ்சனையால் ஒரங்கட்டப்படுகிறார்கள் என்பதை அறிய மறந்து விடுகிறார்கள். ஒரே வார்டில் போட்டி வேட்பாளர்கள் நின்றது, மேல்மட்ட ஆதரவு கிடைக்காதது, பண பலம் இல்லாமல் போனது என பலவழிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
எனவே தேர்தலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கட்சி மீண்டும் எழுச்சியுடன் வீறு நடைபோடும் என்கின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
இதையும் படியுங்கள்…பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்