வர்சா:
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் உள்ளனர்.
அத்துடன், உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் செல்ல உள்ளனர். மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கும், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவுக்கும், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கும், மத்திய இணை மந்திரி வி.கே.சிங் போலந்துக்கும் செல்கிறார்கள்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் உள்பட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்போது போலந்து எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர் என இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
‘உக்ரைனில் இருந்து வந்த மக்களால் எல்லைப் பகுதிகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் நாங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். போலந்து வந்துள்ள இந்திய மாணவர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இந்திய உயர்மட்டக் குழுவிற்கும் போலந்து ஒத்துழைப்பு வழங்கி உதவும். இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து எல்லைக்குள் செல்லலாம்’ என்றும் தூதர் தெரிவித்தார்.