இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல் – அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற – ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும்.
அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.
இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வீ போன்ற தலைவர்கள் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் எழுந்து நின்று அருமைச் சகோதரர் ராகுல்காந்தி, “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக அவர் உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்றுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் – அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு – சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு – செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு – இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக – அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளன. ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத்தான் ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் – சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக்கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.