இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் விஞ்ஞானி சர் சி. வி.ராமனைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் – பிப்ரவரி 28-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
1928 ஆம் ஆண்டு இதே நாளில் ஃபோட்டான்கள் சிதறும் ஒரு நிகழ்வை அவர் கண்டுபிடித்தார், அது பின்னர் ‘ராமன் விளைவு’ என்று அறியப்பட்டது. கண்டுபிடிப்பு நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,1930 இல் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது, இது அறிவியல் துறையில் இந்தியாவிற்கான முதல் நோபல் பரிசு ஆகும்.
ராமன் விளைவு எப்படி நடந்தது?
ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு சர் சி. வி.ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். பயணத்தில் மத்திய தரைக் கடல் பகுதி நீல நிறமாக இருந்தது. வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் உள்ளது என்பது அவர் மனதில் எழுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான விடை தேடி பின்னாளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ, திரவப்பொருளாகவோ, வாயுப்பொருளாகவோ இருக்கலாம். அந்த ஊடகங்களில் ஒளி செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ (molecular scattering light ) ஏற்படுகிறது என்கிற உண்மையைக் கண்டறிந்தார். இந்த சிறப்பான ஆய்வுக்குத்தான் அவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.
அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்’ தோன்றுவதை அவர் கண்டார். அவை ‘ராமன் வரிகள்’ என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு’ (Raman effect ) என்றும் பின்னாளில் அழைக்கப்படத் தொடங்கியது.
ஆண்டுதோறும் புதிய அணுகுமுறை
அறிவியல் தினம் ஆண்டு தோறும் மனிதக்குலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருள் நிர்ணயிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு அறிவியல் தினத்தின் கருப்பொருள் ‘அறிவியலில் பெண்கள்’. கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவியல் தினத்தின் கருப்பொருள் ‘அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தறிவின் எதிர்காலம்: கல்வித் திறன்கள் மற்றும் வேலையில் தாக்கம்’.
இந்த ஆண்டு 2022 அறிவியல் தினத்தின் கருப்பொருள் ‘நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை’ என்கிற தலைப்பில் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளை ஊக்குவிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அன்றாட வாழ்வில் அறிவியல்:
அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அறிவியல் உதவுகிறது. சாத்தியமாகாத விஷயங்களைக் கூட எளிதாகச் செய்துவிடும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டு வருகின்றது. அறிவியல் வளர்ச்சி மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் மனிதனுடைய உழைப்பை வெகுவாக குறைத்துள்ளது.
இருப்பினும், வேலைகள் குறைவடைவதனால் மனிதனின் ஆரோக்கியம் பல வழிகளிலும் கெடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த அறிவியல் வளர்ச்சியால் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அறிவியல் எப்பொழுதும் மனித நலன்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மனித நலன்களைக் கெடுப்பதாக மாறி விடக்கூடாது.
– கட்டுரையாளர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தரவு அறிவியல் துணைப் பேராசிரியர்