இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடந்து முடிந்த பிறகு, லாக்டெளன் வந்தது. பிறகு, ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து என அடுத்தடுத்து படத்திற்கு தடைகள் வந்தன. அதைத் தொடர்ந்து, படக்குழுவுக்குள் மனக்கசப்பு வந்து நீதிமன்றம் வரை சென்றது அனைவரும் அறிந்ததே.
இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர், தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படமும் இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ‘அந்நியன்’ ரீமேக்கையும் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தன. இதில் ராம் சரண் படம் ஆரம்பமானது. தில் ராஜூ தயாரிக்கிறார். ‘RRR’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு இந்தப் படத்தில் கலந்துகொண்டார், ராம் சரண்.
ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், தெலுங்கு நடிகர்கள் ஶ்ரீகாந்த், நவீன் சந்திரா, சுனில் எனப் பெரிய பட்டாளமே இருக்கிறது. திரு ஒளிப்பதிவு, தமன் இசை, மலையாளத்தில் புகழ்பெற்ற எடிட்டர் சமீர் முகமது என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங். கார்த்திக் சுப்புராஜின் கதையைத்தான் ஷங்கர் இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்கின்றனர். ‘புட்டபொம்மா’, ‘செல்லம்மா’, ‘ஹலமதி ஹபீபோ’ உள்ளிட்ட பாடல்களுக்கு டான்ஸ் கோரியோகிராஃபி செய்த ஜானி மாஸ்டர் இதில் பணியாற்றுகிறார். ஒரு பாடலுக்கு 10 கோடி, ஒரு ஸ்டன்ட் சீக்வென்ஸுக்கு 8 கோடி என மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது இந்தப் படம்.
அரசியல் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ராம் சரணுக்கு டூயல் ரோலாம். அதில் ஒரு கேரக்டரில் தேர்தல் அதிகாரியாக நடிக்கிறார். சமீபமாக, எஸ்.ஜே.சூர்யா இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து விசாரித்து பார்த்ததில், இந்தப் படத்தில் அவர் முதலமைச்சராக நடிக்கிறார் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’, ‘மாநாடு’ என நெகட்டிவ் ரோலில் கலக்கியவருக்கு அடுத்தடுத்து நிறைய படங்கள் காத்திருக்கின்றன. இந்தப் படத்திலும் நெகட்டிவ் ஷேடில்தான் அவரது கதாபாத்திரம் இருக்குமாம்.
ஷங்கர் இயக்கம் என்றாலே பிரமாண்டம்தான். தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50வது படம் என்பது இன்னும் பிரமாண்டம். அதனால் இதன் வெளியீடு நிச்சயம் கோலாகலமாக இருக்கும். 2023 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் மீதமுள்ள பகுதிகளை இயக்கவிருக்கிறார், இயக்குநர் ஷங்கர்.