ரயில்வே திணைக்களத்திடம், அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தினால் 10 நாட்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது சுமார் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ள போதிலும், ரயில் சேவைக்கு அது தடையாக இருக்காதென தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 100,000 லீற்றர் எரிபொருள் பயன்பாட்டில் ரயில்கள் இயங்குவதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்த அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் முறையை செயற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் நாட்டில் ஏழு நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பு மட்டுமே இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆறு நாட்களில் டீசல் கப்பல் ஒன்று நாடு திரும்பும் என சுட்டிக்காட்டிய கூட்டுத்தாபனம், கப்பல் தரையிறங்குவதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.