கீவ்-உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா – உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது.
உக்ரைனில் உள்ள விமான தளங்கள், எரிபொருள் கிடங்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. முக்கிய துறைமுகங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் அமைதி பேச்சுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை, முதலில் ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி, பின் அழைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.தீப்பிழம்புசோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு உக்ரைன். கிழக்கு ஐரோப்பிய நாடான இதன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது.
கடந்த 24ம் தேதி தாக்குதலை துவங்கிய ரஷ்ய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நோக்கி முன்னேறி வருகிறது. கீவ் நகர் அருகே நேற்று அதிகாலை மிகப்பெரிய வெடிசத்தம் கேட்டது. அதை தொடர்ந்து மிகப் பெரிய தீப்பிழம்பு வானத்தை நோக்கி எழுந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். வீடுகளில் தரை தளத்திற்கு கீழ் உள்ள சுரங்க அறைகளில் மக்கள் பதுங்கினர். ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட கீவ் நகர மக்களுக்கு உக்ரைன் அரசு ஆயுதங்களை வழங்கியது. அதை எடுத்துக் கொண்டு சிலர் சாலைகளில் இறங்கி சண்டையிடத் துவங்கினர்.
கீவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மிகப் பெரிய வெடி சத்தம் கேட்டதாக அதிபர் மாளிகை தகவல் தெரிவித்தது. கீவ் நகரில் இருந்து 37 கி.மீ., தொலைவில் உள்ள வாசில்கீவ் என்ற இடத்தில் உள்ள விமான தளத்தின் எரிபொருள் கிடங்கின் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்தது. இதில் எரிபொருள் கிடங்கு முழுமையாக சேதம் அடைந்தது. ரஷ்யாவில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரின் வெளிப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் முகாமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், கார்கிவ் நகருக்குள் ரஷ்ய படையினர் நேற்று நுழைந்தனர். இவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டனர். கார்கிவ் நகர சாலைகளில் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. துறைமுகங்கள்கார்கிவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள எரிவாயு குழாயை ரஷ்ய படையினர் குண்டு வைத்து தகர்த்தனர். அப்பகுதி முழுதும் நெருப்புக்காடாக காட்சி அளித்தது.
வீடுகளில் ஜன்னல்களை அடைத்து பாதுகாப்பாக இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கிடையே கார்கிவ் நகரிலிருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றி விட்டதாக, உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள விமான தளங்கள், முக்கிய துறைமுகங்களை ரஷ்ய படையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில், அண்டை நாடான பெலாரசின் கோமெல் நகரில் அமைதி பேச்சு நடத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கிக்கு, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அழைப்பு விடுத்தார்.செலன்ஸ்கியுடன் பேச்சு நடத்த ரஷ்ய பிரதிநிதிகள் குழு, கோமெல் நகரில் காத்திருப்பதாக அவர் நேற்று கூறினார்.
எங்கள் உரிமை
இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி நேற்று கூறியதாவது:நேற்று முன் தினம் இரவு மிக கடுமையான இரவாக கழிந்தது. மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். அவர்களை எதிர்த்து போராடி வருகிறோம். நாட்டுக்காகவும், எங்கள் சுதந்திரத்திற்காகவும் சண்டையிடுகிறோம்; அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது.அமைதி பேச்சுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு இடமளித்த பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சு நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக வார்சா, பிராடிஸ்லாவா, இஸ்தான்புல், புடாபெஸ்ட், பாகு உள்ளிட்ட நகரங்களிலோ அல்லது ரஷ்ய படையினருக்கு உதவிடாத ஒரு நாட்டிலோ அமைதி பேச்சு நடந்தால் மட்டுமே அது நேர்மையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, பெலாரஸ் நாட்டின் கோமெல் நகரில் அமைதி பேச்சு நடத்த சம்மதிப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேற்று மாலை திடீரென அறிவித்தார்.
ரஷ்ய விமானங்கள் பறக்க10 நாடுகள் தடை விதிப்பு
லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, ஸ்லொவேனியா, பல்கேரியா, செக் குடியரசு, போலந்து, ருமேனியா, பெல்ஜியம் ஆகிய ஒன்பது ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்க நாடான கனடாவும் தங்கள் வான்வழியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யாவும் தடை விதித்துள்ளது.