புதுடெல்லி,
ரஷியா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஆக்கிரமித்தது.
இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷியா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்த சூழலில் உக்ரைன் மீதான போர் தொடர்ந்து 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதில் தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாகவும் ரஷிய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த சூழலில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் சண்டை தீவிரமாக நடப்பதால், இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேஷன் கங்கா குறித்து உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.