உக்ரைன்
நாட்டுக்குப் படிக்கப் போய், போரில் சிக்கித் தவித்த மாணவர்களை சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இல்லாத வசதியா, கல்லூரியா என்று இவர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள பல தடைகள், முட்டுக்கட்டைகள், இடையூறுகள், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இல்லை என்பதால்தான் இந்த நாடுகளுக்கு அதிக அளவில் இந்திய மாணவர்கள் படிக்கப் போகிறார்கள் என்று பெற்றோர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
உக்ரைனில் போர் உக்கிரமாகியுள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதல் நிற்பது போலத் தெரியவில்லை. பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் சம்மதித்துள்ள போதிலும் கூட, உக்ரைனின் நேட்டோ நிலைப்பாடு எந்த அளவுக்கு மாறும் என்று தெரியவில்லை. அது மாறாவிட்டால் ரஷ்யாவின் நிலைப்பாடும் மாற வாய்ப்பில்லை.
இந்த நிலையில் உக்ரைனில் படிக்கப் போன இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திய மாணவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு பலமுறை மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் மாணவர்கள் பலரும் வெளியேறாமல் இருந்தனர். இந்த நிலையில் திடீரென ரஷ்யா போர் தொடுத்து விட்டதால் மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்திய அரசு மீட்டு வருகிறது.
மாணவர்களை விமர்சிக்கலாமா?
இதற்கிடையே, உக்ரைனுக்குப் படிக்கப் போன மாணவர்களை இந்தியாவில் சிலர், குறிப்பாக ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் படிக்காமல் ஏன் இவர்கள் உக்ரைனுக்குப் போனார்கள். இந்தியாவில் என்ன கல்லூரியா இல்லை.. இவர்களுக்கு இந்தியாவில் நீட் தேர்வை எழுத யோக்கியதை இல்லை. இதனால்தான் வெளிநாட்டுக்குப் போய் படிக்கிறார்கள். இவர்கள் வசதிக்குப் படிப்பார்கள். இவர்களை மீட்க இந்திய அரசு சிரமப்பட வேண்டுமா என்ற ரீதியில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும், படிக்கும் இந்தியர்கள், பல்வேறு காரணங்களுக்காகவே அங்கு போகிறார்கள். யாரும் மனம் விரும்பிப் போவதில்லை. போனவர்கள் யாரும் இந்தியாவுக்கு விரோதமாக நடந்ததும் இல்லை, நடக்கப் போவதும் இல்லை. எத்தனையோ வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். அதை நாம் மறக்க முடியாது. குறிப்பாக ஷிவ் நாடார் போன்றோர் இந்தியாவுக்காக செய்தி உதவிகள் மிகப் பெரியது.
அதேபோல இந்தியாவில் படிக்காமல் வெளிநாடுகளில் படிக்கும் இந்தியர்களும் கூட அங்கேயே செட்டிலாகி விடுவதில்லை. தங்களது படிப்பையும், அறிவையும் இந்தியாவுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இங்கேயேதான் திரும்பி வருகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தோருக்கு இங்கு அதைப் பதிவதிலும், மருத்துவர்களாக பணியாற்றுவதிலும் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அது இன்னும் சரி செய்யப்படவில்லை.
காரணம் இதுதான்
சரி உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் ஏன் அதிக அளவிலான இந்தியர்கள் படிக்கப் போகிறார்கள்.. என்ன காரணம்?. அதைப் பற்றிப் பார்க்கலாம். உக்ரைனில் மட்டும் கிட்டத்தட்ட 18,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். 2020ம் ஆண்டு நிலவரப்படி, உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 24 சதவீதம் பேர் இந்தியர்கள்.
ஐரோப்பிய நாடுகளிலையே 4வது தலை சிறந்த மருத்துவக் கல்வியைக் கொடுக்கும் நாடு உக்ரைன் தான். இங்கிருந்துதான் உலகின் தலை சிறந்த மருத்துவர்கள் பலரும் உருவாகிறார்கள். சில உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்களில் தரமான உயர் கல்வி அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மிகத் தரமான கல்வியைப் போதிக்கின்றன. இதனால் அங்கு அதிக அளவிலான வெளிநாட்டினர் வருகிறார்கள்.
இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படிக்க ஆகும் செலவை விட உக்ரைனில் படிக்க ஆகும் செலவு மிக மிக குறைவு. இது இன்னொரு காரணம். அதேபோல, உக்ரைனில் கல்விக் கட்டணம் மிக மிக குறைவு. இந்தியாவில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத பலருக்கும் உக்ரைனில் மிகக் குறைந்த கல்விக் கட்டணத்தில் இடம் கிடைக்கிறது. ஆறு வருடம் உக்ரைனில் படித்தால் அதற்கு ஆகும் செலவு மொத்தம் 10.7 லட்சம்தான். இது இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஆகும் செலவை விட பல மடங்கு குறைவாகும்.
இதை விட இன்னொரு முக்கியமான விஷயம், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயில நுழைவுத் தேர்வு கிடையாது. இந்தியாவில் நீட் தேர்வால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள பலருக்கும் உக்ரைன் போன்ற கல்வி நிறுவனங்கள் மிகப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. உக்ரைன் கல்லூரிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருப்பதால் மொழிப் பிரச்சினையும் கிடையாது.
இங்கு பாஸ் ஆக வேண்டும்
மருத்துவப் படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பும் மாணவர்கள், இங்கு தேசிய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை எழுதி பாஸ் ஆக வேண்டும் . அப்போதுதான் அவர்களுக்கு இந்தியாவில் மருத்துவத் தொழில் புரிய உரிமம் கிடைக்கும். ஆண்டுதோறும் உக்ரைனில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டுத் திரும்பும் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் பாஸ் ஆவது 700 பேர்தான். இருந்தாலும் உக்ரைன் சென்று படிக்க விரும்புவோர் எண்ணிக்கை குறையவில்லை. ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டேதான் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளுக்குப் போய் படிக்க விரும்புவோரைக் குறை கூறுவதை விட, அவர்கள் ஏன் அங்கு போகிறார்கள் என்ற காரணத்தை அறிந்து அவர்களையும் இங்கேயே படிக்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவர்களை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பது பெற்றோர்களின் ஆதங்கமாகும்.