உக்ரைனில் போர் தாக்குதலால் சிக்கிய மக்களுக்கு உதவுவதற்காக தனது கோயில் கதவுகளைஇஸ்கான் கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் திறந்துவிட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணைத்தலைவர் ராதாராமன் தாஸ் கூறியபோது, ‘‘உக்ரைனில் உள்ள பல்வேறு இஸ்கான் கோயில் வளாகங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் எந்த நேரத்திலும் கோயில் வளாகத்துக்குச் சென்று உதவியைப் பெறலாம். அங்கு உதவி செய்யபக்தர்களும், கோயில் ஊழியர்களும் காத்திருக்கின்றனர். மக்கள்சேவைக்காக கோயில் கதவுகள்எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கீவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இஸ்கான் கோயில்வளாகங்களில் ஏராளமான பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. செசன்யா போரின்போதுகூட இஸ்கான் கோயில் நிர்வாகங்கள் மக்களுக்கு உதவின’’ என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீவ் நகரத்தில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலை சேர்ந்த பக்தர் ராஜு கோபால் தாஸ் வெளியிட்ட வீடியோவில், ‘‘இங்கு பக்தர்களின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக கோயிலில் வசதிகளை செய்துள்ளோம்’’ என்றார். உக்ரைனில் 54 இஸ்கான் கோயில்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.