டெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும். உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உக்ரைன்-ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி உள்ளன. இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும். ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் 6 விமானங்களில் 1400 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். புக்காரஸ்ட் விமான நிலையத்திலிருந்து 4 விமானங்களும், புதாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இந்தியா வந்தடைந்தன. உக்ரைனிலிருந்து 8000 இந்தியர்கள் வெளியேறி உள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 3 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதே இந்திய அரசின் நோக்கம். தூதரகத்தை தொடர்பு கொண்ட பின்னரே மாணவர்கள் உக்ரைன் எல்லையை கடந்து செல்ல வேண்டும். மாணவர்கள் மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய மந்திரிகள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.