உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா ஐந்தாவது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைனின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனிடையே, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஆப்பரேஷன் கங்கா எனும் பெயரில் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக
இந்திய தூதரகம்
தெரிவித்துள்ளது. மேலும், முதலில் செல்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், உக்ரைன் ரயில்வே சிறப்பு ரயில்களை இலவசமாக இயக்குவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தலைநகர் கீவ்-வில் இருந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியர்கள் மேற்கு பகுதிகளுக்கு செல்லவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் இருந்து மொத்தம் ஐந்து சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். சுமார் 15,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேசமயம், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், அணு ஆயுதங்களை சிறப்பு தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய ராணுவத்துக்கு புடின் உத்தரவிட்டுள்ளதால், அவரது உத்திகளில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, உக்ரைனைப் பணிய வைக்க வேறு ஏதேனும் திட்டத்தை அவர் வைத்துள்ளாரா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.