மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு காயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிடவில்லை.
உக்ரைன் மீது இன்று 5வது நாளாக ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே ஊடகம் மூலம் உரையாற்றிய
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை பாதுகாக்க வீரர்கள் உத்வேகத்துடன் போராடும்படி கேட்டுக்கொண்டார். மேலும், ரஷியாவுடனான போரில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உள்பட 1184 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த போரில் இரு நாட்டுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தாக்குதல் தீவிரமடையும் சூழலே இருந்து வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் கொடுத்த பதிலடியில் 4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு பதில் தெரிவித்துள்ள ரஷிய அதிகாரிகள், உக்ரைன் தரப்பை விட தங்கள் தரப்பில் பாதிப்பு பல மடங்கு குறைவு என்றும், தாக்குதல் தொடங்கியுதில் இருந்து இதுவரை உக்ரைனின் ராணுவ தளவாடங்களை தாக்கி வருவதாக தெரிவித்துள்ளதுடன், இந்த தாக்குதலின்போது ரஷிய படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டுள்ளது.