புதுடெல்லி:
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பிய நிலையில் உக்ரைன் நெருக்கடி குறித்து அவர் தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உக்ரைனின் தற்போதைய நிலவரம், உக்ரைனில் மீதமுள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.