ரஷ்ய வீரர்கள்
தங்களது தாக்குதலை நிறுத்தி விட்டு, உக்ரைனை விட்டு வெளியேறி உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு
உக்ரைன்
அதிபர்
விளாடிமிர் ஜெலன்ஸ்கி
கூறியுள்ளார். கிட்டத்தட்ட உயிர்ப் பிச்சை தருகிறேன், ஓடிப் போய்ருங்க என்று உக்ரைன் அதிபர் மறைமுகமாக கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து நான்கு நாட்களாகிறது. போர் நிற்பதாகத் தெரியவில்லை. உக்ரைனும் சரி, ரஷ்யாவும் சரி தங்களது நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. ரஷ்யாவோ ஒரு படி மேலே போய், அணு ஆயுதங்களை சிறப்பு ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதில் அவர் ரஷ்ய வீரர்களுக்கு நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போங்க.. போய் ரஷ்யாவுடன் சண்டை போடுங்க.. கைதிகளை திறந்து விட்ட உக்ரைன்!
இந்த உரையில், உங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். தாக்குதலை நிறுத்தி விட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என்று அவர் ரஷ்ய ராணுவத்தினரை கேட்டுக் கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, தனது அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில் ஜெலன்ஸ்கி இப்படி தைரியமாக மிரட்டல் விடுத்திருப்பதை ரஷ்யாவை அதிர வைத்துள்ளது. ஒரு பக்கம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை, மறுபக்கம் ரஷ்யப் படையினருக்கு மிரட்டல் என அதிரடியான நிலைப்பாடுகளை எடுத்துள்ளார் ஜெலன்ஸ்கி.
இன்னொரு புறம் கீவ் நகரை சுற்றி வளைத்துள்ள ரஷ்யப் படை நிதானமாக உள்ளே முன்னேறிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயப்பட வேண்டாம் என்றும், மக்களைத் தாக்குவது எங்களது எண்ணம் அல்ல. அவர்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்றும் கீவ் நகர மக்களுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
உலகில் எந்தப் போர் நடந்தாலும்.. முக்கியக் காரணமான மூலப் புள்ளி.. “அமெரிக்கா”!
ரஷ்யப் படையினர் முதலில் காட்டிய வேகத்தை இப்போது காட்டவில்லை. மாறாக குறைத்துள்ளனர். இது எதற்காக என்று தெரியவில்லை. உயிரிழப்புகளை தடுக்கவும், குறைக்கவும் இப்படி வேகம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அல்லது வேறு ஏதேனும் தந்திரமாக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே, ரஷ்யத் தாக்குதலில் இதுவரை உக்ரைன் தரப்பில் 376 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்படுகிறது.