உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஐந்தாவது நாளாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் பல்முனை தாக்குதலால் உக்ரைனின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து அந்நகரத்தை பிடிக்கும் நோக்கில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.
உக்ரைன்- ரஷ்ய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் உக்ரைனின் ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அரசின் சொத்துக்களை தாக்கி அழிப்பதே நோக்கம் எனவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது தங்களின் நோக்கம் அல்ல எனவும் ரஷ்யா தெரிவித்தது.
ஆனால், ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், சொந்த நாட்டை காக்க உக்ரைன் நாட்டினர் ஆயுதம் ஏந்த வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்து வரும் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என ஐ.நா., சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
BREAKING: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் சம்மதம்!
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா காலத்தில் நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய உக்ரைனின் விமானத்தை ரஷ்யா தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் நெருக்கடியான காலங்களில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை எடுத்து சென்ற நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்டது உக்ரைனுக்கு சொந்தமான
மிரியா
எனும் விமானம். இந்த விமானத்தை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியேவுக்கு வெளியே ரஷ்ய படையெடுப்பாளர்களால் அந்த விமானம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பகத்தில், “ரஷ்யா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.