உலகில் எந்தப் போர் நடந்தாலும்.. முக்கியக் காரணமான மூலப் புள்ளி.. "அமெரிக்கா"!

ஒன்று யாருடனாவது தான் சண்டையிட வேண்டும் .. அல்லது யாரையாவது சண்டையில் இழுத்து விட வேண்டும்.. சண்டையில்லாத உலகமே இருக்கக் கூடாது.. இதுதான் அமெரிக்காவின் அடிப்படை நோக்கமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு உலகப் போர்களின் போக்கையும், அந்தப் போர்கள் உருவாகக் காரணமாக இருந்தவை குறித்தும் சிந்திக்கத் தோன்றுகிறது.

உலகில் எந்த மூலையில் எந்த போர் நடந்தாலும் அதற்கு ஒரு முக்கிய காரணம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதுதான் அமெரிக்கா. எந்தப் போராக இருந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. இதைத்தான் கடந்த கால போர்களும், தற்போது நடந்து வரும் ரஷ்யா –
உக்ரைன்
போரும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

சமீப காலத்தில் அமெரிக்கா மிகப் பெரிய அளவில் போரில் ஈடுபட்ட நாடுகள் என்றால் அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான்.. இன்று இரு நாடுகளும் ஒன்றுமில்லாமல் போய் விட்டன. இரு நாடுகளுக்குள்ளும் எந்த அதிகாரத்தின் பேரில், உரிமையின் பேரில் அமெரிக்கா புகுந்தது என்ற கேள்வியைக் கூட யாரும் கேட்க முடியவில்லை. இத்தனைக்கும் அமெரிக்காவுக்கும், இந்த நாடுகளுக்கும் இடையிலான தூரம் மிக மிக அதிகம். ஆனால் தனது பக்கத்து நாட்டுடன் ஏற்பட்ட பிரச்சினையில் ரஷ்யா சண்டை போடுவதை ஆட்சேபித்து தாம் தூமென்று குதிக்கிறது அமெரிக்கா. உறுமுகிறது, கதறுகிறது, கோபப்படுகிறது, கொந்தளிக்கிறது.

ரஷ்யாவுக்கு ஆதரவா.. இந்திய மாணவர்கள் மீது தாக்குல்.. உக்ரைன் ராணுவம் வெறிச்செயல்!

அமெரிக்கா ஒரு நாட்டின் மீது படையெடுத்தால் அல்லது தாக்குதல் நடத்தினால் அது பாதுகாப்பு அச்சுறுத்தல் நிமித்தமானது என்பது அமெரிக்காவின் வாதம். அதுவே ரஷ்யாவோ அல்லது வேறு நாடோ சண்டை போட்டால், போர் தொடுத்தால் அதற்குப் பெயர் ஆக்கிரமிப்பு. இதுதான் அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் வைக்கும் “மொக்கை” வாதமாகும்.

கடந்த பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நடந்த போர்களைப் பார்த்தால் அதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதை பார்க்கலாம். ஈராக் போராக இருந்தாலும் சரி, ஈரான் ஈராக் மோதலாக இருந்தாலும் சரி, ஆப்கானிஸ்தான் போராக இருந்தாலும் சரி.. அமெரிக்கா வலுவான காரணமாக அமைந்துள்ளது. இப்போது நடக்கும் உக்ரைன் போரிலும் கூட அமெரிக்காதான் முக்கிய புள்ளியாக உள்ளது.

முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகளில் ஒன்றுதான் உக்ரைன். ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பிய கண்டத்தில் பெரிய நாடு உக்ரைன். நிறைய இயற்கை வளங்கள் நிரம்பிய நாடு. ரஷ்யாவுக்கே டஃப் கொடுக்கக் கூடிய அளவுக்கு பலமான நாடும் கூட. முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளை அமெரிக்கா தனது ஆதிக்கத்தின் கீழ் உள்ள நேட்டோவில் இணைத்து விட்டது.

புடின் புது “ஸ்கெட்ச்”.. ராணுவத் தாக்குதல் வேகம் திடீர் குறைப்பு.. உக்ரைன் குழப்பம்!

ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் அது நேட்டோவில் கொண்டு வந்து விட்டது. இப்போது ரஷ்யாவுக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் உக்ரைனையும் உள்ளே கொண்டு வர அது துடிக்கிறது. அப்படி நடந்தால் கருங்கடல் பகுதியை நேட்டோ வசம் கொண்டு வந்து விடலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். அப்படிக் கொண்டு வந்தால் ரஷ்யாவின் கடல் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்திக்கும். அமெரிக்காவை மீறிப் போக முடியாத நிலை ஏற்படும். அதாவது ரஷ்யாவை ரஷ்யாவுடன் முடக்குவதே அமெரிக்காவின் திட்டம்.

இந்தத் திட்டத்திற்கு உக்ரைன் ஒத்து ஊதியதாலும், ரஷ்யாவை தொடர்ந்து பகைத்துக் கொண்டே இருந்ததாலும்தான் ரஷ்யா கோபத்தில் கொந்தளித்து போரில் குதித்து விட்டது. இந்தப் போரை உண்மையில் அமெரிக்கா உள்ளூர வரவேற்கவே செய்யும். காரணம், இதனால் ரஷ்யாவின் பெயர் ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் மிகப் பெரிய அளவில் கெடும். அதை விட முக்கியமாக முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிடமும் ரஷ்யா மீது அதிருப்தி எழும் என்பது அமெரிக்காவின் கணக்கு.

அணு ஆயுதங்களை ரெடி பண்ணுங்க.. புடின் திடீர் உத்தரவு.. உருக்குலையுமா உக்ரைன்?

சோவியத் யூனியன் பிளவுபட்டதற்கு எதிரானவர் புடின். சோவியத் யூனியன் பிளவுபட்டிருக்கக் கூடாது. ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். மீண்டும் சோவியத் யூனியனை கட்டி எழுப்பும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். ஆனால் அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பாதகமாக அது அமையும் என்பதால்தான் ரஷ்யாவை சிதைக்கும் நோக்கில் தொடர்ந்து அமெரிக்கா உக்ரைனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. இதோ இன்று போரில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து உருவாக்கிய நேட்டோ அமைப்பானது வட அட்லான்டிக் கடல் பிரதேச நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே உருவானது. ஆனால் பல்வேறு நாடுகளையும் இதன் கீழ் கொண்டு வந்து ஐரோப்பாவையும் தனது கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா விரும்பியதின் விளைவே இன்றைய ரஷ்யா – உக்ரைன் போருக்கு முக்கியக் காரணம்.

ஒன்று தான் போர் புரிய வேண்டும்.. அல்லது தனது லாபத்துக்காக மற்றவர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். இதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடக உள்ளது. இன்று நாம் காணும் அனைத்துப் போர்களின் பின்னாலும் ஏதாவது ஒரு வகையில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.