புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு பாஜக எம்.பி. வாக்கு கேட்பது நிகழ்கிறது. இதற்கு சமாஜ்வாதியில் போட்டியிடும் சுவாமி பிரசாத் மவுரியா, பாஜக எம்.பி.யான சங்கமித்ரா மவுரியா இருப்பது காரணமாகி விட்டது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) முக்கியத் தலைவராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகக் கருதப்படும் மவுரியாவை மாயாவதி கடந்த தேர்தலுக்கு முன்பாக கட்சியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து பாஜகவின் வேட்பாளராக 2017 தேர்தலில் போட்டியிட்டு குஷிநகர் மாவட்ட பட்ரோனா தொகுதி எம்எல்ஏவானார் மவுரியா. பிஎஸ்பியின் உ.பி. மாநிலத் தலைவராகவும் இருந்த மவுரியாவை மாயாவதி எதிர்கட்சி தலைவராகவும் அமர்த்தி இருந்தார் மாயாவதி.
பாஜகவிற்கு மவுரியா வந்த பின் அவரது மகளான சங்கமித்ராவிற்கும் பாஜகவின் 2019 தேர்தலில் பதாயூ மக்களவை தொகுதியின் எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு தந்தையான மவுரியா மட்டும் கட்சி மாறி விட்டார்.
தற்போது நடைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் சுவாமி பிரசாத் மவுரியா, முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியில் இணைந்தார். இதன் சார்பில் குஷிநகர் மாவட்டத்தின் பஸில்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பாஜகவில் சுரேந்திரா குஷ்வாஹா போட்டியிடுகிறார். நேற்று மாலை பஸில்நகரின் ஜவுரா முகுலி கிராமத்திற்கு பாஜக எம்.பி.யான சங்கமித்ரா வந்திருந்தார்.
இங்கு அவர் பாஜக வேட்பாளரான சுரேந்திராவிற்காக அன்றி தனது தந்தை சுவாமி பிரசாத்திற்கு சமாஜ்வாதி சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தார். ரகசியமாக வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகள் கேட்ட சங்கமித்ராவை உள்ளூர் பாஜக மற்றும் பத்திரிகையாளர்கள் பார்த்து விட்டனர்.
இதனால், நேராக திரும்பி வந்தவர் தனது வாகனத்தில் அமர்ந்து கொண்டார் சங்கமித்ரா. இவரிடம் தன் தந்தைக்கு வாக்கு சேகரிப்பது குறித்த கேட்டமைக்கு தான் அவ்வாறு செய்யவில்லை எனவும் மறுத்துள்ளார் சங்கமித்ரா.
இதனால், சங்கமித்ரா மீது குஷிநகர் மாவட்ட பாஜகவினர் தம் தலைமைக்கு புகார் அளித்துள்ளனர். பாஜகவின் ஆட்சியில் கேபினேட் அமைச்சராகவும் இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் புறக்கணிப்பதாகப் புகார் கூறி இருந்தார்.
இதனால், சமாஜ்வாதிக்கு வந்தவர் தனது பாரம்பரியத் தொகுதியான பட்ரோனாவில் போட்டியிடவில்லை. இங்கு காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த ஆர்பிஎன் சிங், பாஜகவில் இணைந்து போட்டியிடுகிறார்.
இதில் கடும் போட்டியானக் களமாக பட்ரோனா மாறியதால், மவுரியாவும் அருகிலுள்ள பஸில்நகர் தொகுதியில் போடிட்யிடுகிறார். இங்கு ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3 இல் நடைபெற உள்ளது.