கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள பாக்கியபுரத்தை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் – ஜோஸ்பின் தம்பதியின் மகள் வியானி (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதுங்கு குழியில் தங்கியுள்ள தங்கை ள காப்பாற்ற வேண்டுமென அவர் தங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
கார்கிவ் நகரில் தற்போது மிகுந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது. தூதரக அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் கடந்த 5 நாட்களாக பதுங்கு குழியில் தங்கியுள்ளோம். இரவு நேரத்தில் மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை நிலவுவதால் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இங்கு என்னுடன் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளனர். தற்போது வரை இருந்த உணவு தீரும் நிலையில் உள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பட வசதி இல்லை. விடாது ஒலிக்கும் ஏவுகணை சத்தத்தால் வெளியில் செல்ல மிகுந்த அச்சமாக உள்ளது.
எங்களைப்போல வெவ்வேறு இடங்களில் பல மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. எனவே மத்திய அரசு எங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியேவை பார்த்து பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
தமிழக அரசு எனது மகள் மட்டுமின்றி அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அனைவரையும் மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.