புதுச்சேரியில் அரசின் துறைகளில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிகள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சுகாதாரத்துறையில் பணிகளை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கவுரவத்தலைவர் பாலமோகன், பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் கீதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “சுகாதாரத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவது வழக்கம். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு 88 பேர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு சுகாதாரத்துறையில் வாரிசுதாரர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. ஆனால் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அந்த வாரிசுகளை குறிவைத்து தற்போது பணம் பறித்திருப்பதுதான் வேதனையான சம்பவம். சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் வாரிசுதாரர் பணி நியமனம் தொடர்பான கோப்புகளை கையாண்ட செக்ஷன் கிளார்க் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் சிலர், தாங்கள் நேரடியாக ஈடுபட்டால் பிரச்னை வரலாம் என்று நினைத்து தங்களுக்கு மிகவும் நம்பகமான ராஜ்குமார் என்பவரை ஏஜென்ட்டாக நியமனம் செய்து அப்பாவிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர்.
அந்த ராஜ்குமார் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் லிஃப்ட் ஆபரேட்டராக இருக்கிறார். சக ஊழியர்களின் குடும்பத்தினர் என்றுகூட நினைத்துப் பார்க்காமல் கருணையின்றி மனசாட்சியை அடகு வைத்து பணத்தை வசூல் செய்திருக்கின்றனர். பணம் கொடுத்த விஷயத்தை வெளியில் சொன்னால் எங்கே தங்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் விண்ணப்பதாரர்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கின்றனர். இதுதான் அவருக்கு வசதியாக போய்விட்டது. தான் சங்கத்தின் நிர்வாகி என்றும், தன் தயவில்லாமல் தன்னை மீறி யாரும் பணி நியமனம் பெற முடியாது என்றும் வாரிசுதாரர்களிடம் மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
மேலும் என் மூலமாக விண்ணப்பங்கள் சென்றால்தான் இயக்குநர் அலுவலகத்தில் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள் என்று பேசியிருக்கிறார். அதேபோல சுகாதரத்துறை இயக்குநர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை ராஜ்குமார் மூலம் மட்டுமே பெறப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்களிடம் மறைமுகமாக பேரமும் பேசியிருக்கும் ராஜ்குமார், பணம் தராதவர்களின் விண்ணப்பங்களை தன்னிடமே வைத்துக்கொண்டு திருப்பியும் தந்துள்ளார்.
இந்த முறைகேடுகள் குறித்து கடந்த 2021 பிப்ரவரியில் தலைமை செயலர், சுகாதாரத்துறையின் செயலர் மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரிடம் புகார் மனு தரப்பட்டது. ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் அளித்து நடவடிக்கை இல்லை. இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள் அளித்த மனுவின் அடிப்படையில், பிப்ரவரி 25-ம் தேதியன்று இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைப்பெற்றது. ரகசிய விசாரணை என்ற பெயரில் புகார் அளித்தவரையும், புகாருக்கு ஆளானவரையும் தனித்தனியாக விசாரிக்காமல், ஒன்றாக வைத்து விசாரணை செய்தனர்.
அங்கு, குற்றச்சாட்டு கூறியவரை நிற்க வைத்தும் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை அமர வைத்தும் விசாரணை செய்துள்ளனர். அப்போது ராஜ்குமார் பிப்ரவரி 28-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால், தான் பணம் கேட்கவில்லை என்று புகார்தாரரை மிரட்டி அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து வாங்கியிருக்கிறார். கையெழுத்து போடவில்லை என்றால் வெளியே போக முடியாது என்றும் மிரட்டியிருக்கிறார். இதன்மூலம் அதிகாரிகள் ராஜ்குமாரை காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாக தெரிகிறது.
லிஃப்ட் ஆபரேட்டர் ராஜ்குமார் பணி ஓய்வு பெறுவதால் சுகாதாரத்துறைக்கும், அவருக்குமான தொடர்பு நாளையுடன் முடிந்துவிடும். அதன் பிறகு துறை ரீதியான விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மாட்டார். எனவே முறைகேடுகளில் ஈடுபட்ட ராஜகுமாரை பணியிடை நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட அனைவரிடமும், உயர்மட்டக்குழு அமைத்து, விசாரணை நடத்தி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். லட்சக்கணக்கில் நடைப்பெற்ற இந்த முறைகேட்டில் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் தலைமைச்செயலரை மீண்டும் சந்திக்க இருக்கிறோம்” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க ராஜ்குமாரை தொடர்புகொண்டபோது, “அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பில் நான் பொறுப்பாளராக இருக்கிறேன். என்னுடன் வேலை செய்து உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அதிகாரிகளை சந்தித்துப் பேசும் விஷயத்தில் அவர்களுக்கு பதற்றம் இருக்கும். அதனால் அவர்களை சம்மந்தப்பட்ட செக்ஷனுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பேன். சம்மேளனத்தில் இருக்கும் பெரும்பாலான சங்கங்கள் எங்கள் மத்திய கூட்டமைப்பில் இணைந்துவிட்டன. அவர்களிடம் யாரும் செல்லவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில்தான் என் மீது இப்படி புகாரளித்திருக்கின்றனர்.
நான் யாரிடமும் பணம் வாங்கியதில்லை. என் மீது அப்படி யாரும் புகாரும் கொடுத்ததில்லை. நான் சமூக சேவை செய்து வருகிறேன். சங்கத்தில் இருந்தால் ஊழியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நான் அதைத்தான் செய்தேன். உதவியை கொச்சைப்படுத்துகிறார்கள். ஓய்வுபெறும் நாளில் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்” என்றவரிடம் “விண்ணப்பங்களை நீங்கள்தான் கையாளுவதாக செல்போன் ஆடியோவில் கூறியிருக்கிறீர்களே..?: என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, “வாரிசுதாரர்களுக்கு விண்ணப்பங்களை நான் எழுதிக் கொடுப்பேன். அவ்வளவுதான்” என்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலுவிடம் பேசினோம். “ராஜ்குமார் என்பவர் தனது விண்ணப்பத்தை வாங்கி வைத்திருக்கிறார் என்று ஒருவர் புகாரளித்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் குழு அமைக்கும்படி சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவிட்டிருக்கிறார். அதனடிப்படையில் மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையில் புகாரை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. வந்தவுடன் அதன் அடிப்படையில் நாங்கள் அடித்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம். அதேபோல அவர்கள் அளித்திருக்கும் செல்போன் ஆடியோவில் பணம் கொடுத்ததாக எங்கும் கூறப்படவில்லை. காவல்துறைதான் அதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும்” என்றார்.