கீவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷிய அழைப்பை ஏற்று பெலாரசில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. இதன்படி இருநாட்டு பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.
இதனிடையே, உக்ரைன், கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் உயிரிழந்து இருக்கலாம் என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. சிறப்பு அனுமதியுடன் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.