கார்கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பெலாரஸ் எல்லையில் இன்று இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷியா போரை முதலில் நிறுத்திவிட்டு, உக்ரைனில் உள்ள ரஷிய படைகளை திரும்ப பெற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் ரஷியா தரப்பில் தனது நிபந்தனையை முன்வைத்தது.
பேச்சுவார்த்தை ஒருபுறமிருக்க ரஷியாவின் வழக்கமான தாக்குதலும் தொடர்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் இன்று ரஷிய படைகள் இடைவிடாமல் குண்டுமழை பொழிந்தது. இதில் பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய எதிரிகள் குடியிருப்பு பகுதிகளில் குண்டு வீசியதாகவும், இதில் பொதுமக்கள் தரப்பில் 11 பேர் இறந்தததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார்.