சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (29). எலெக்ட்ரீசியனாக வேலைப் பார்த்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா (23). கடந்த 26-ம் தேதி இளங்கோவன், புழல் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் தன்னுடைய தாத்தா வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வெண்ணிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த புழல் போலீஸார், இளங்கோவனைத் தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த இளங்கோவனைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் வெண்ணிலாவைக் கொலை செய்ததற்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இளங்கோவனுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரைப்பிரிந்து இளங்கோவன் தனியாக வசித்து வந்தார். இந்தச் சூழலில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வெண்ணிலாவுடன் இளங்கோவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெண்ணிலாவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அவரும் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து வெண்ணிலாவை இளங்கோவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொளத்தூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். அப்போது வெண்ணிலாவுக்குப் பிறந்த குழந்தைகளை கவனிப்பதில் இளங்கோவனுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தப் பிரச்னை இளங்கோவனின் தாத்தாவிடம் முறையிட சம்பவத்தன்று இருவரும் சென்றுள்ளனர். அங்கு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் வெண்ணிலாவை இளங்கோவன் கொலை செய்துள்ளார். இதையடுத்து இளங்கோவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.
விசாரணையின்போது வெண்ணிலாவை கொலை செய்ததற்கு இன்னொரு காரணத்தையும் இளங்கோவன் போலீஸிடம் கூறியிருக்கிறார். “கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். சில மாதங்களாக வெண்ணிலாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்தன. அதனால் அவளைக் கண்டித்தேன். ஆனால் அவள், மாறவில்லை. அதனால்தான் சமரச பேச தாத்தா வீட்டுக்குச் சென்றோம். அங்கேயும் அவள், என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். அதனால்தான் அவளைக் கொலை செய்துவிட்டேன்” என்று இளங்கோவன் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.