புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) தலைவராக, அதன் முன்னாள் முழு நேர உறுப்பினர் மாதாபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு கால பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. செபி தலைவராக 3 ஆண்டு காலத்துக்கு அவர் 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2020 வரை 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு பெற்றார். பின்னர், 18 மாதங்கள் அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அதன் புதிய தலைவராக மாதாபி பூரியை நியமித்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. செபிக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இவரது நியமனத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இவர் செபியில் உள்ள பல்வேறு கமிட்டிகளின் தலைவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். கடைசியாக, பத்திரங்கள் சந்தையின் தரவு அணுகல் மற்றும் தனியுரிமை தொடர்பான ஆலோசனை கமிட்டியின் தலைவராக பணி புரிந்தார். இதற்கு முன்பு, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர், தலைமை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.