டெல்லி : உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் வெளியேற்றும் திட்டத்தினை ஒன்றிய அரசு அவர்களது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 24ம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்களை போலாந்து எல்லையில் உக்ரைன் ராணுவம் மற்றும் போலீசார் அடித்து துன்புறுத்தும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, இது போன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும் இந்த காட்சிகளை பார்த்த அதிர்ச்சி அடைந்துள்ள அவர்களது குடும்பங்களின் நிலை கண்டும் தனது மனம் நெகழ்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு தனது மீட்பு நடவடிக்கை குறித்த தகவல்களை உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களிடமும் இங்குள்ள அவர்களின் குடும்பத்தினரிடமும் விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். சொந்த நாட்டு மக்களை நாம் கைவிட்டு விட முடியாது என்றும் ட்விட்டரில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.