மாஸ்கோ: பொருளாதாரத் தடைகள், ஸ்விஃப்ட்டில் இருந்து விலக்கி வைப்பு, ரஷ்யன் சென்ட்ரல் பேங்கை முடக்கும் முயற்சிகளால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக ஜி 7 நாடுகள், இன்னும் பிற ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளில் தைவான், சிங்கப்பூர், தென் கொரியா எனப் பல நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் அறிவித்துள்ளன. இந்தத் தடைகள் தான் ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்புக்கு தண்டனை, இதன் மூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்துவதே நோக்கம் என உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விலக்கி வைத்துள்ளன. ஸ்விஃப்ட் என்பது, சொசைட்டி ஃபார் வேர்ல்டுவைட் இன்டர்பேங்க் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன் (Worldwide Interbank Financial Telecommunication) என்பதன் சுருக்கமாகும். இந்த அமைப்பிலிருந்து ரஷ்யா விலக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் தடைகளால் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது ரஷ்ய நாணயம் ரூபிள். வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலையில் வர்த்தக துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 119 என்றளவில் இருந்தது. இது முந்தைய மதிப்பைவிட 29% சரிவு. இதுவரை கண்டிராத சரிவை ரூபிள் சந்தித்துள்ளது.
ரஷ்ய சந்தை போக்கை கணித்த ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக் தலைமை பொருளாதார நிபுணர், டிம் ஹார்கோர்ட், “இன்று காலை விளாடிவோஸ்தக்கில் சந்தை திறந்ததுமே, ரூபிளை வாங்க யாரும் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
இன்று காலை ரஷ்ய வர்த்தக சந்தை செயல்படத் தொடங்கியதுமே முதலீட்டாளர்கள் தங்கள் ரூபிள் முதலீடுகளை டாலராக, யென்னாக மாற்ற முயன்றனர். இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 119 என்றளவில் சரிந்தது. யூரோவுக்கு நிகரான ரூபிள் மதிப்பும் 1.34% குறைந்து $1.1855 என்று வர்த்தகமானது. யென்னுக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 1.03665 என்றளவில் வர்த்தகமானது.
ரஷ்ய அதிபர் புதின் நேற்றிரவு அணு ஆயுதப் படையைத் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியது, இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.