தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான நாயகிகள் சிலர் தற்போது மீண்டும் தமிழுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகைகள் பூமிகா, மாளவிகா, லைலா, மதுபாலா, தபு உள்பட பலரும் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு விசிட் அடித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் இங்கே பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர்கள் அதன்பின் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று போய்விட, நடிப்பில் இருந்தே முற்றிலும் ஒதுங்கினார்கள். முழுநேர இல்லத்தரசியாகவும் இன்ஸ்டாவில் புகைப்படங்களைத் தெளித்து வந்தார்கள். தபு உள்ளிட்ட சிலர் மட்டும் பாலிவுட்டில் நிறைய படங்கள் செய்து அங்கே முன்னணி நடிகைகளாக தற்போது வலம் வருகின்றனர். இதனிடையே ஒரு சிறிய பிரேக்கிற்குப் பின், தமிழில் தங்களின் இரண்டாவது ஆட்டத்தைத் துவங்கி இருக்கும் நடிகைகளில் சிலர் இங்கே…
பூமிகா
விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. அதன்பின் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுனு ஒரு காதல்’ என ரம்மியமான படங்களில் சிறகடித்தார். தொடர்ந்து தெலுங்கு, இந்தியில் நடித்து வந்தவர், ‘களவாடிய பொழுதுகள்’ படத்தில்தான் கதாநாயகியாக கடைசியாக நடித்தார். அதன்பிறகு அக்கா, அண்ணி என கேரக்டர்கள் ரோல்களுக்கு மாறினார். நயன்தாராவின் ‘கொலையுதிர் கால’த்திற்கு பின் இப்போது உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’வில் நடித்து கொடுத்துள்ளார். மலையாளத்திலும் அனுபமா பரமேஸ்வரனுடன் ‘பட்டர்ஃப்ளை’யில் பறந்துவருகிறார்.
மாளவிகா
‘உன்னைத் தேடி’, ‘ரோஜாவனம்’, ‘ஆனந்த பூங்காற்றே’ என சாஃப்டான நாயகியாக நடித்து வந்த மாளவிகா, ‘வெற்றிக்கொடி கட்டு’விற்கு பின், இளைஞர்களின் மனம் கவர்ந்தவரானார். ‘கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ பாடல் மூலம் ஓவர்நைட்டில் பிரபலமானார். பின்னர் தெலுங்கு, கன்னடம் என உலாவந்தவருக்கு ‘நான் அவன் இல்லை’ பிரேக் கொடுத்தும் தொடர்ந்து கௌரவ வேடங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார். அதன்பிறகு திருமணம், குழந்தைகள் (இரண்டு மகள்கள்) என குடும்பத்தில் முழுக்கவனம் செலுத்திய மாளவிகா, இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஜீவா – சிவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தில் கமிட் ஆகியுள்ளார். “நிறைய படங்கள் கேட்டு வந்தாங்க. ஆனா, நான் நடிக்கற படம், என் நேரத்திற்கும் பயனுள்ளதா இருக்கணும்னு நினைச்சேன்” எனச் சொல்லும் மாளவிகா, இப்போது ‘கோல்மால்’ படத்தில் ஜிவாவின் பாஸ் ஆக நடித்திருக்கிறாராம்.
மதுபாலா
மது என்கிற மதுபாலாவை பார்த்ததும் ‘ரோஜா’வில் வரும் ‘சின்னச் சின்ன ஆசை’ சட்டென ஞாபகத்திற்கு வந்துவிடும். கே.பாலசந்தரின் ‘அழகன்’ படத்தில் அறிமுகமாகி ‘ஜென்டில்மேன்’, ‘மிஸ்டர் ரோமியோ’ என டான்ஸிலும் கெத்து காட்டினார். அதன்பிறகு தமிழ் பக்கம் வராமல் இருந்தவர், சில வருடங்களுக்கு முன்னார் பாபி சிம்ஹாவின் ‘அக்னி தேவி’யில் ரீ எnட்ரி ஆனார். இப்போது வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். தவிர அருள்நிதியின் ‘தேஜாவு’, சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் மேனகை எனச் சில படங்களில் நடித்துள்ளார். “ரோஜா’ல நடிச்சது மாதிரி நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால், தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புறேன்” என்கிறார் மது.
லைலா
சூர்யா, விக்ரம், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடியானவர் சிரிப்பழகி லைலா. விஜயகாந்தின் ‘கள்ளழகர்’ மூலம் தமிழுக்கு வந்தவர். ‘பிதாமகன்’, ‘நந்தா’, ‘தீனா’ என ஒரு ரவுண்டு வந்தார். அஜித்தின் ‘திருப்பதி’யில் கௌரவ வேடத்தில் வந்து போனதுதான் இங்கே கடைசியாக அவர் நடித்த படம். அதன்பிறகு குழந்தை வளர்பில் பிசியானார். இடையே டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் அவ்வப்போது தலைகாட்டினார். இப்போது மீண்டும் நடிக்கும் ஆர்வத்தில் உள்ளார். வெப்சீரீஸ் ஒன்றில் நடித்து வரும் அவர், பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
தபு
தபு தமிழில் செய்ததெல்லாம் வெயிட்டான படங்கள். ‘காதல் தேசம்’, ‘சிறைச்சாலை’, ‘இருவர்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ எனத் தேர்ந்தெடுத்து நடித்தவர். தொடர்ந்து இதர மொழிகளில் மின்னியவர் இபோதும் பாலிவுட்டில் பிஸியாகவே இருக்கிறார். நீண்ட வருட இடைவெளிக்கு பின் தமிழில் ‘அஜித் 61’ படத்தில் நடிக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைத் தற்போது நடந்து வருகிறது.
இவர்களில் உங்களின் ஃபேவரைட் 90ஸ் நாயகி யார்? கமென்ட்டில் சொல்லுங்கள்.