மகாராஷ்டிராவில் ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொடுரமாக தாக்கியதில் 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள டைனமிக் இங்க்லீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 64 பேரை ஞாயிற்றுக்கிழமை அம்பா அம்பிகா பகுதிக்கு நான்கு ஆசிரியர்கள் கொண்ட குழு ட்ரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளனர். மாலை 4 மணியளவில் அவர்கள் மலையேறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுத்தேனீக்கள் மாணவர்களை பலமாக தாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், தேனீ கொட்டியதால் மாணவர்களுக்கு குமட்டல், சரும தடிப்பு, ரத்த அழுத்தக்குறைவு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 21 மாணவர்களில் 16 பேர் சிறுமிகள். அதில் 6 பேருக்கு ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM