சேலம்:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறி அதை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் இன்று காலை சேலம் கோட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். பின்னர் அ.தி.மு.க.வினர் தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கண்டன உரை ஆற்றியதாவது:-
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியாளர்கள் இன்றைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது பொய் வழக்கு சுமத்தி சிறையில் அடைத்திருக்கின்றார்.
சென்னையில் இருக்கின்ற 49-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்று இருக்கிறார். இந்த செய்தி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கவனத்திற்கு வந்தவுடன் தொண்டர்களோடு அந்த நபரை விரட்டி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து ஜனநாயக முறைப்படி தனது கடமையை ஆற்றிருக்கின்றார். காவல் துறை செய்ய வேண்டிய கடமையை முன்னாள் அமைச்சர் செய்துள்ளார். இதற்கு பரிசு சிறை தண்டனை.
ஆனால் குற்றம் செய்ய முயற்சி செய்த நபர் இன்றைக்கு மருத்துவமனையில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். குற்றவாளியை பிடித்து முறைப்படி காவல் துறையிடம் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சுமத்தி தி.மு.க. அரசு ஜெயிலில் அடைத்துள்ளது. இது நியாமா?
ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமும். ஆனால் அதற்கு மாறாக எப்படியாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டப்பட்டு தி.மு.க.வை சேர்ந்த குண்டர்களையும், ரவுடிகளையும் சென்னை, கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இறக்கி விட்டு இப்படி கள்ளஓட்டு போட்டு வெற்றி பெற்ற கட்சி தான் தி.மு.க. என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
நரேஷ்குமார் மீது 12 வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு விபரத்தை இந்த நேரத்தில் குறிப்பிடுகிறேன். 2017-ல் ஜாமீனில் விடுவிக்க முடியாத பிடியாணையில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2018-ல் அவருக்கு இந்த வழக்கில் 4 மாத கால தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
2017-ல் 3 நாட்கள் தண்டனை மற்றும் அதே ஆண்டில் வேறு ஒரு வழக்கில் தண்டனை பெற்று அபராதம் செலுத்தி இருக்கின்றார்.
நரேஷ்குமார் மீது உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை 15-வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நரேஷ்குமார் ஒரு பிரபல ரவுடி. அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாக்கிறார். குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்.
ஏற்கனவே டி.ஜி.பி. நகர்ப்புற தேர்தல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நடைபெறுவதற்கு குண்டர்களும், ரவுடிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டார். அப்படி இருக்கும்போது ஏன் இந்த ரவுடிகளும், குண்டர்களும் கைது செய்யப்படவில்லை.
தி.மு.க.வை சேர்ந்த ரவுடி நரேஷ்குமார் கைது செய்யப்பட்டிருந்தால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்காது. ஆகவே ரவுடிகளையும், குண்டர்களையும் சென்னையில் சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளார்கள். அதனால் தான் இன்றைக்கு கள்ள ஓட்டுபோட்டு தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறதே தவிர ஜனநாயக முறைப்படி வெற்றி பெறவில்லை.
மாநில தேர்தல் ஆணையம் தி.மு.க.வின் கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. மாநில தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கைகோர்த்து தி.மு.க. வெற்றி பெறுவதற்கு துணை நின்றிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நேர்மையான முறையில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அந்த வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து அதன் மூலமாகத்தான் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்.
பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நாங்கள் செல்கின்றபோது சொல்கிறார்கள் நாங்கள் எல்லாம் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போட்டோம், எப்படி தோல்வி அடைந்தீர்கள் என கேட்கின்றார்கள். இன்னும் பல பேர் அ.தி.மு.க மட்டுமல்ல பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கின்றது. ஒரு சிலருக்கு ஓட்டு கிடைக்கவே இல்லை. அப்படி என்றால் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்து உள்ளது என்பதை மக்கள் அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும்.
ஆகவே தி.மு.க. வாக்கு எந்திரத்தில் முறைகேடு, தில்லுமுல்லு செய்து அதன் மூலமாக தான் இந்த வெற்றியை கொண்டாடுகிறார்களே தவிர மக்கள் வாக்களித்து அதன் மூலம் கொண்டாடும் கட்சி தி.மு.க. இல்லை.
தி.மு.க. கள்ள ஓட்டு போடுவதில் வல்லமை படைத்தவர்கள். பல வாக்குச்சாவடிகளை கைப்பற்றி மாலை 3 மணிக்கு மேலாக குண்டர்களும், ரவுடிகளும் கள்ள ஓட்டுக்களை போட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக சென்னையில் அதிக அளவில் கள்ள ஓட்டு போட்டு இருக்கின்றார்கள்.
சென்னையில் 2021 சட்டமன்ற தேர்தலில் சுமார் 67 சதவீதத்தில் இருந்து 68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அப்போது சட்டம் ஒழங்கு பாதுகாக்கப்பட்டது. ரவுடிகள் ராஜ்ஜியம் இல்லை. மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன நரேஷ்குமார் போன்ற குண்டர்களும், ரவுடிகளும் சென்னையில் சுதந்திரமாக உலாவிய காரணத்தினாலே சென்னை மாநகர மக்கள் அச்சப்பட்டு அவர்களுக்கு பயந்து தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அதனால் தான் 43 சதவீதம் வாக்குகள் தான் பதிவாகி இருக்கிறது. அதுவும் கள்ள ஓட்டு போட்டு தான் 43 சதவீதம் வந்துள்ளது. உன்மையில் வாக்குசதவீதம் என்றால் 30 சதவீதத்திற்கு கீழே தான் இருக்கும். கிட்டத்தட்ட 13 சதவீதத்திற்கு மேலாக கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.
சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி, வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளனர். குறிப்பிட்ட வாக்குகளுக்கு மேல் எந்த பட்டனை அழுத்தினாலும் தி.மு.க. சின்னத்திற்குதான் வாக்குகள் பதிவாகும் வகையில் புரோகிராம் செய்து வெற்றி பெற்று இருக்கின்றார்கள் போன்ற எல்லா தகவல்களும் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து இருந்தால் அ.தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்கும்.
9 மாத கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்து அந்த பணத்தை வைத்து பரிசு பொருட்கள், வெள்ளி கொலுசு, வெள்ளி, தங்க நாணயம் வாக்காளர்களுக்கு வழங்கினார்கள். தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கொடுத்து இருக்கிறார்கள். தி.மு.க. பெற்ற வெற்றி மயாஜால வெற்றி. உண்மையான வெற்றி அல்ல.
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் இதுபோல் எங்கேயாவது பிரச்சினை நடந்ததா?. ஆகவே நாங்கள் ஜனநாயக முறைப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.