உக்ரைன் நாட்டுக் குடிமக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் நிரூபித்தவண்ணம் உள்ளன.
போருக்காக சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்த பெண்மணிகள் வரை ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள்,
ஒற்றை ஆளாக துணிச்சலாக ரஷ்ய இராணுவ டாங்குகளை எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன்,
உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையிலும், எல்லை பாதுகாப்புப் படையில் இணையும் பெண்கள் என, தொடர்ந்து, சற்றும் அஞ்சாமல் தாங்கள் புடினைக் கண்டு அஞ்சவில்லை என நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் உக்ரைனியர்கள்.
அவ்வகையில், தற்போது ரஷ்ய இராணுவ டாங்குகளுக்கு சவால் விடும் வகையில், ஆயுதம் ஏதும் இல்லாமல், உக்ரைன் நாட்டு சாதாரண குடிமக்கள், அதாவது இராணுவத்தார் அல்லாதவர்கள் சற்றும் பயம் இல்லாமல், தில்லாக எதிர்கொள்வதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதேபோல, ரஷ்யா இராணுவ டாங்குகள் வலம் வரும்போது ஒரு உக்ரைனியர் டாங்கு ஒன்றின் மீது ஏறிக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் அந்த டாங்கு மீது ஏறியதைத் தொடர்ந்து அந்த டாங்கை இயக்குபவர்கள் டாங்கை நிறுத்த, சட்டென கீழிறங்கும் அந்த உக்ரைனியர், அந்த டாங்கு முன்னேற முடியாத வகையில், சாலையில் டாங்குக்கு முன்னால் முழங்காலிட்டு நிற்கிறார்.
அடுத்து என்ன ஆகுமோ என பதற்றம் ஏற்பட, அதற்குள் அங்கு நின்ற மற்ற உக்ரைனியர்கள் அவரை அந்த டாங்குக்கு முன்னாலிருந்து அகற்றிவிட, நமக்கு அப்பாடா என்றிருக்கிறது.