வார்சா: ஒரு போர் என்ன செய்யும் என்பதற்கு அஜ்மல் ரஹ்மானியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஜ்மல் ரஹ்மானி (40), 18 ஆண்டுகளாக காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
நேட்டோ சார்பில் அவர் பணியில் இருந்துள்ளார். மனைவி, இரண்டு குழந்தைகள் வசிப்பதற்கு சொந்தமாக ஒரு வீடு, பயணிக்க கார் என்று வசதியாக வாழ்ந்துள்ளார். ஆனால், ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரஹ்மானிக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. இதனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதைக் கூட அவர் நிறுத்தினார்.
ஆப்கனிலிருந்து வெளியேற திட்டமிட்டு வீடு, கார் என எல்லாவற்றையும் விற்பனை செய்தார். கொஞ்சம் பணத்துடன் அவர் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளிநாட்டில் தஞ்சம் புக முயன்றார். பல நாடுகளில் விண்ணப்பித்த அவருக்கு உக்ரைன் மட்டுமே வாயில் கதவைத் திறந்தது. குடும்பத்துடன் உக்ரைனில் தஞ்சம் புகுந்தார் ரஹ்மானி. கருங்கடல் அருகேவுள்ள ஒடேசா எனும் துறைமுக நகரில் குடும்பத்துடன் குடிஅமர்ந்தார் அஜ்மல் ரஹ்மானி. அங்கு தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டு புதிய நாட்டில் புதிய கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஆனால், 4 நாட்களுக்கு முன் அவருக்கு மீண்டும் வாழ்க்கை கோர முகத்தைக் காட்டியது. ஒடேசாவில் குண்டு மழையைப் பொழிந்தது ரஷ்யா. ஏற்கெனவே ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கன் நாட்டில் வசித்த அனுபவம் இருந்ததால் உடனே நிலைமையை உணர்ந்து குடும்பத்துடன் 1,100 கிலோ மீட்டர் பயணித்து போலந்து எல்லையை அடைந்தார்.
அங்கே செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மானி, ”நான் ஒரு போரிலிருந்து தப்பித்து இந்த நாட்டிற்கு வந்தேன். இங்கேயும் போர் ஆரம்பித்துவிட்டது. நான் துரதிர்ஷ்டசாலி. நான் மார்வா, (மனைவி), மினா (மகள்), ஒமர் (மகன்) ஆகியோர் 30 கிலோமீட்டர் நடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இப்போது போலந்தின் மேதிகா நகரில் உள்ளோம். விரைவில் அருகில் உள்ள பிரசெமிஸல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவோம். அங்கே அகதிகளுக்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். லட்சக்கணக்க்கானோர் என்னைப் போல் போலந்து வந்துள்ளனர். இனி என் எதிர்காலம் என்னவென்ற கவலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போலந்து அதிகாரிகளும், தன்னார்வலர்களும் எங்களை இன்முகத்துடன் வரவேற்றது நம்பிக்கையளிக்கிறது. நான் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். இருந்தாலும் அன்பு இருக்கிறது. என் குடும்பம் என்னுடன் இருக்கிறது. அதைவிட வேறெதுவும் பெரிதில்லை” என்றார்.