கீவ்: ‘நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்’ என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி. போர் முற்றியுள்ள சூழலில், ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதில் அவர், “உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 2-வது நாளாக தாக்குதல் நடக்கும் சூழலில் உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் தனித்து போராடிக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
எதிரியின் (ரஷ்யாவின்) முதல் இலக்கு நான் தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில் தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் உள்ளது. ரஷ்யா என்னை வீழ்த்தி அரசியல் ரீதியாக உக்ரைனை ஆக்கிரமித்து ஆட்டுவிக்க நினைக்கிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோவில், ‘தனித்துவிடப்பட்டுள்ளோம்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். “எங்களுக்கு உதவுவார் இல்லை, எங்களை நேட்டோவில் பிரதிநிதியாக்கவும் யாரும் முன்வரவில்லை” என்று கூறியிருந்தார்.
ஜெலன்ஸ்கி பாதுகாப்பு – அமெரிக்கா கவலை: இதற்கிடையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டணி பிளின்கன் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், ”எனக்குத் தெரிந்தவரையில் அதிபர் ஜெலன்ஸ்கி இன்னும் உக்ரைனில் தான் இருக்கிறார். அவரது பாதுகாப்பு குறித்தும் உக்ரைனில் உள்ள பிற நண்பர்கள், அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்தும் கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஆனால், உக்ரைனுக்கு ஆதரவாக தனது படைகளை அனுப்பப்போவதில்லை என்று ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிபடத் தெரிவித்துவிட்டார். புதினுடன் இனி பேச்சும் இல்லை என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கி வருகிறார்.
ஐரோப்பாவில் உக்ரைன் நாடு ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பெரிய நாடு. இதன் மக்கள் தொகை 44 மில்லியன். சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் சுதந்திர நாடான உக்ரைன் தன்னை ஐரோப்பாவின் அங்கமாகவே பாவிக்கிறது. 2014-ல் ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் பதவி பறிப்பிற்குப் பின்னர் உக்ரைன் நேட்டோவில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆர்வத்தை எதிர்த்தே ரஷ்ய அதிபர் புதின் 2-வது நாளாக ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
ஜெலன்ஸ்கியை அப்புறப்படுத்திவிட்டு ரஷ்யாவுக்கு தலையாட்டும் ஆட்சியாளர்களை அமரவைத்து, உக்ரைனை தன்னை மறைமுகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு நேட்டோவை விலக்கி வைக்க முயல்கிறார் புதின். ஆனால், நேட்டோவுடன் பிரச்சினைக்கு உண்மையான, நேர்மையான பேச்சுவார்த்தை தான் நீடித்த தீர்வைத் தரும் இந்தியா தனது நிலைப்பாட்டைக் கூறியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரடியாக மாஸ்கோவிற்கே சென்று ரஷ்யாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளார். சீனாவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தனது சொந்த பாதுகாப்புக்காகவே என்று ஆதரவுக் குரலை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.