“நீங்கள் இல்லாவிட்டால் இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்கவே முடியாது” – யுவன்

‘ரசிகர்களால் தான் 25 வருடத்தை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளேன். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அரவிந்தன் படம் கடந்த 1997ம் ஆண்டு இதே நாள் வெளியானது. திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், யுவன்சங்கர்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த 25 வருடத்தை கடந்திருக்க முடியாது.

image

என் ஆழ்மனதிலிருந்து உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால், இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

16 வயது சிறுவனாக அரவிந்தன் படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி, இன்று வலிமை வரை வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன. இதுவரையான என் இசைப்பயணம் மகிழ்ச்சியாகவும், மேஜிக்காகவும் இருக்கிறது. என் தந்தைக்கு இந்தநேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் தகுதியான இசையை அமைப்பது மட்டுமே எனது குறிக்கோள். ஊடக நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

image

உங்களின் ‘பிஜிஎம் கிங்’ ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ உள்ளிட்ட பட்டங்கள் தான் இதுவரை நான் அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமாக அமைந்தது. என் ரசிகர்களின் அன்புக்கு முன்னதாக விருதுகள் எனக்கு பெரிய விஷயமே அல்ல. ரசிர்களின் அன்புதான் என்னை முன்னோக்கி ஓட வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யுவன் பேசுகையில், ”25 வருடம் எப்படி வேகமாக சென்றது எனக்கு தெரியவில்லை. நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்கள் வேலை செய்துள்ளோம். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. 

image

நான் பயணங்களின் போது அப்பா பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பேன். என் மனைவி ‘போதும் பாட்டை மாத்துங்க’ன்னு சொல்ற அளவுக்குப் கேட்பேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.