திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “பொய் பேசுவதில் தி.மு.க-வினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். எந்தக் காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஆட்சி தான் இந்த தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவர் மீதும் பொய் வழக்குகள் போட்டு தி.மு.க அரசு பழி வாங்கிக் கொண்டிருக்கிறது.
ரெய்டு என்ற பெயரில் ஏவிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கு என்று வழக்கு மட்டுமே போடப்படுகிறது. எனவே இது நுணுக்கமாக கவனிக்கப்பட வேண்டும். முறைகேடு என்று வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆட்சி நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக தவறு செய்திருந்தால் அதை எதுவுமே அவர்களால் சொல்ல முடியவில்லை, நிரூபிக்கவும் முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறமுடியும்.
அ.தி.மு.க கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் நாங்கள்தான் கொண்டு வந்தோம். காவிரி குடிநீர் திட்டம் முதல் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து விஷயங்களையும் பொய் சொல்லி வருகிறார்கள். தனக்கு அதிகாரமே இல்லாத ஒரு பிரச்னையில் மத்திய அரசாங்கமே முடிவெடுக்கும் ஒரு பிரச்னையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.