புதுடெல்லி: “உக்ரைனில் நிலவிய போர்ச் சூழலால் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு பயம் இருந்தது” என்று உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா, லேகா என்ற இரு மாணவிகள் உக்ரைனில் நிலவும் சூழல் தொடர்பாக பேசினர். “உக்ரைனில் நிலவிய போர்ச் சூழலால் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு பயம் இருந்தது. அரசின் உதவியால் நாங்கள் இன்று நாடு திரும்பியுள்ளோம். இப்போது எங்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் நிறைய உதவிகள் செய்கிறார்கள். எங்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி. எங்களை போல நிறைய பேர் உக்ரைனில் கஷ்டப்படுகிறார்கள். அவர்களையும் அரசு மீட்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் அங்குள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பு பிரச்சனையாகிவிட்டது. இவர்கள் எண்ணிக்கை 20,000-ஐ தாண்டும் எனக் கருதப்படுகிறது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கையும் சில ஆயிரங்களை தாண்டுகின்றன. இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் வெளியுறத்துறை அமைச்சகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் மூலமாக டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். நேற்று விடியற்காலை முதல் டெல்லிக்கு வரும் மாணவர்கள் அங்கிருந்தே அடுத்த விமானங்களில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், டெல்லி வந்திறங்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை தமிழ்நாடு அரசு இல்லத்தின் அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தின் உள்ளேயே வந்து வரவேற்கின்றனர். மேலும் அம்மாணவர்களுக்கு சூடான உணவுவகைகளை அவர்கள் பரிமாறுகிறார்கள். இட்லி, தோசை, வெஜிடபிள் பிரியாணி, சாதங்களில் சாம்பார், தயிர், எழுமிச்சை போன்ற பல வகை உணவுகள் மாணவர்களுக்கு பரிமாறப்படுகிறது. மாணவர்களின் வருகையை எதிர்பார்த்து விமான நிலையத்திலேயே பலமணி நேரங்களாக காத்திருக்கும் தமிழக அதிகாரிகள், அவர்களின் பசியை போக்க டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் சமைக்கப்பட்ட உணவு வகையில் ஹாட்பேக்கில் வரவழைத்து பரிமாறுகின்றனர்.
டெல்லி வந்த இந்திய மாணவர்கள் விவரம்:
ருமேனியாவின் தலைநகரான புச்சாரஸ்டின் ஒட்டேப்பின்னி விமானநிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை முதல் விமானம் 198 இந்தியர்களுடன் புறப்பட்டது. நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்த விமானத்தில் இரண்டு மாணவியர் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் தமிழர்கள். ஒட்டேப்பின்னி விமானநிலையத்திலிருந்து இரண்டாவது ஏர் இந்தியா விமானம் 250 இந்தியர்களுடன் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது. இதில், தலா ஆறு மாணவ, மாணவியர்கள் என 12 பேர் தமிழர்கள்.
மூன்றாவது விமானம் 240 இந்தியர்களுடன் ஹங்கேரியின் தலைநகரான புத்தாபெஸ்டிலிருந்து கிளம்பி நேற்று (பிப்ரவரி 27) மாலை டெல்லி வந்தது. இதில் தமிழர்கள் 3 பேர் இருந்தனர். இவர்களில் திருப்பூரிலிருந்து வைஷ்ணவா நந்தா, மதுரையிலிருந்து ஸ்ரீலேகா மற்றும் தூத்துக்குடியிலிருந்து பிரேமா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு பயில்பவர்கள். இதே புத்தபெஸ்டிலிருந்து நான்காவது ஏர் இந்தியா விமானம் 198 இந்தியர்களுடன் நேற்று மதியம் புறப்பட்டுள்ளது. இன்று விடியற்காலை 6.50 மணிக்கு டெல்லி வந்தடைந்த இதில், சென்னையின் மாணவி விஸாதா ஜெயக்குமார் மற்றும் சரண் மணியன் எனும் மாணவரும் வந்தனர்.
இவர்கள் இருவரும் நண்பகல் 12.45 மணி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் ஒரு விமானம் இன்று மாலை உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்து சேர உள்ளது. இதில், சுமார் இருபது தமிழக மாணவ, மாணவியர் எதிர்பார்க்கப்படுகின்றனர். இப்போது வரை, உக்ரைனிலிருந்து வந்த மொத்தம் 22 தமிழக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் மேற்குப்பகுதியில் செர்னிவிப்சி எனும் நகரிலுள்ள புக்வேனியன் மாநில மருத்துவப் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.