பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டக்கூடாது என கூறிய திமுக கவுன்சிலரை, அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான போஸ்டரை அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் என்பவர், சேகர் வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளார்.
இதையடுத்து என் வீட்டின் சுவற்றில் அ.தி.மு.க. போஸ்டரை ஒட்டக்கூடாது என்று சேகர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தி.மு.க. கவுன்சிலர் சேகரை சராமரியாக தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த சேகரின் தம்பி குமார் என்பவரையும் தாக்கியுள்ளார்.
இது குறித்து சேகர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே திமுக கவுன்சிலர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிககள் பலர் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM