மகா சிவராத்திரி: நாளை இரவு சிவாலயங்களில் 4 சாமத்திலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை

சிவராத்திரியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் அனைத்து சிவாலயங்களிலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் சிவராத்திரியன்று சிவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகள் குறித்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயா குருக்கள் (எ) வெங்கட சுப்பிரமணியம் சிவாச்சாரியார் கூறியதாவது:-

சிவாலயங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியன்று வரும் சிவராத்திரி அனைத்து நலன்களையும் ஒரு சேர வழங்குவதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

அந்தவகையில் நாளை (செவ்வாய்கிழமை) மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 9.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை 3-ம் கால பூஜையும், அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை 4-ம் கால பூஜையும் நடக்கிறது.

விரதமிருந்து மகா சிவராத்திரி அன்று 4 சாமத்திலும் சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து விதமான நற்பலன்களையும் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.