இம்பால்:
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலையில் வாக்குபப்திவு மந்தமாக இருந்த நிலையில், அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது. காலை 11 மணி நிலவரப்படி 27.34 சதவீதம் வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.53 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக காக்போக்பி மாவட்டத்தில் 76.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் 70.21 சதவீதம், இம்பால் கிழக்கில் 65.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
தேர்தலையொட்டி ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சுராசந்த்பூர் மாவட்டம் திபாய்முக் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு சீறிப்பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியின் விசையில் அவரது கை பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் இரண்டு கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது. அதற்குப் பதில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்… இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து எல்லைக்குள் வரலாம்- தூதர் தகவல்