புதுடெல்லி: மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தநிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. போர் நிறுத்தப்படாவிட்டால், எண்ணிக்கை 7 மில்லியனை எட்டும். எல்லையில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் வரிசையில் நின்று எல்லையை கடக்க முயல்கின்றனர்.
உக்ரைனில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். எங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரஷ்யாவின் அமைதிக்கு எதிரான நடவடிக்கையின் விளைவாக ஏற்கெனவே 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய அதிகாரிகளிடம் இருக்கும் அதே தகவல்தான் என்னிடம் உள்ளன. மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது. போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது.
நான் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், இரு நாடுகளும் அமைதியை விரும்புகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்திய பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.