சியோல் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் வட கொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி கிழக்காசிய நாடான வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. எனினும் கடந்த ஒரு மாதமாக அந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இதற்கிடையே உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தால் உலக நாடுகளின் கவனம் வட கொரியாவை விட்டு விலகியது.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நேற்று முன்தினம் வட கொரியா அறிக்கை வெளியிட்டது.இந்த பரபரப்புக்கு மத்தியில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தி உள்ளது. இந்த ஆண்டு வட கொரியாவால்நடத்தப்பட்டுள்ள எட்டாவது ஏவுகணை சோதனை இது.நிலத்தில் இருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை 300 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்று வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்தது.
ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகவும் இதனால் கப்பல் விமானம் என எதும் சேதமடையவில்லை என்றும் ஜப்பான் ராணுவ அமைச்சர் நோபுயோ கிஷி தெரிவித்தார்.
இதை தென் கொரிய ராணுவமும் நேற்று உறுதிபடுத்தி உள்ளது. பின் தென் கொரியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. அதில் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Advertisement