முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, கல்லூரி காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்தியகூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசாகாலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரைநடந்துள்ள நிகழ்வுகள் முதல்பாகமாக வெளியிடப்படுகிறது.
‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலை வெளியிடுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றுகிறார். விழாவில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழா தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய மடலில், ‘நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் அழைக்க முடியாத ஏக்கம் உள்ளது.நேரலை வாயிலாக அந்தவிழா நிகழ்வுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அவரவர் இடத்தில் இருந்தும், ஆங்காங்கு உள்ள திமுக அலுவலகங்களில் கூடியும் இந்தநிகழ்வை கண்டுகளிக்கலாம். புத்தகத்தை வாங்கிப்படித்து, உங்கள் கருத்துகளை தெரிவித்து, அடுத்த பாகத்தை எழுத எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.