முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமையைப் பறிக்க முயலும் கேரள அரசின் அதிகார அத்துமீறலை, தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்திற்குரியது.
கேரளாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் நிலத்தையும், நீரையும் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நில வரிப்பணமாக ரூபாய் 2.5 லட்சமும், மின் உற்பத்திக்கான உபரி வரிப்பணமாக ரூபாய் 7.5 லட்சமும் கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசு செலுத்திவருகிறது. அணையைப் பாதுகாத்துப் பராமரிக்கும் உரிமை தமிழ்நாடு அரசின் வசம் இருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டது. அணைப் பாதுகாப்பையும், தமிழ்நாடு அரசின் அணையைப் பாதுகாக்கும் உரிமையையும் உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் ஒப்பந்த விதிமீறலையும், அதிகார அத்துமீறலையும் தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், அணை பாதுகாப்பிற்கான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதியளிக்க மறுக்கும் துணிவு கேரள அரசிற்கு வந்திருக்காது.
கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் நடைபெற்ற முல்லைப் பெரியாறு அணை துணைக்கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் புறக்கணித்துள்ளதன் மூலமே கேரள அரசின் எதேச்சதிகாரப் போக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பினை சிறிதும் மதியாது முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும், சமரசமற்ற சட்டப் போராட்டம் நடத்தி, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.